யாழ் மாவட்டத்துக்கு சேதனப் பசளை உற்பத்திக்கு நிதி!
Thursday, July 12th, 2018
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாகச் சேதனப்பசளை உற்பத்திகளை மேற்கொள்ளுவதற்கான நிதி கிடைத்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது.
சேதன பசளையைப் பயன்படுத்தி இயற்கை முறை விவசாயத்தை மேற்கொள்ளுவதன் மூலம் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உற்பத்திப் பொருள்களைப் பெற முடியும். தற்போது இரசாயனப் பசளை மற்றும் கிருமிநாசினிப் பாவனை அதிகரித்துள்ளது. இயற்கையான முறையில் பயிர்களை விளைவிப்பதற்கு சற்றுக்காலம் எடுக்கும். அதனால் விவசாயிகள் அதனை முன்னெடுப்பதில்லை. ஆகவே சேதனப்பசளை உற்பத்தியை மேற்கொண்டு அதன்மூலம் இயற்கை முறை விவசாயத்தை முன்னெடுப்பதற்காக 1.8 மில்லியன் ரூபாவை அமைச்சு ஒதுக்கியுள்ளது.
5 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. நிதியைப் பெறும் பயனாளிகள் சேதனப் பசளையை உற்பத்தி செய்ய வேண்டும். அதனை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதோடு அவரது கிராமத்தில் உள்ளவர்களுக்கும் பசளையை விற்பனை செய்து அவர்களையும் இயற்கை முறை விவசாயத்துக்கு பழக்கப்படுத்த வேண்டும்.
தற்போது பயனாளிகள் தெரிவு நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே சிறியளவில் சேதனப்பசளை உற்பத்தியை மேற்கொள்பவராகவும் விவசாய நடவடிக்கையில் ஆர்வம் உள்ளவராகவும் கிராமத்தில் சேதனப் பசளையை உற்பத்தி செய்தால் அதனை கொள்வனவு செய்து பயிர்ச்செய்கையை மேற்கொள்ளக்கூடிய இடத்தில் உள்ளவராகவும் இருக்கும் ஒருவர் பயனாளியாக தெரிவுசெய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|
|


