இந்தியாவிலிருந்து வரும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை தீர்க்க விசேட வேலைத்திட்டம் – நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிப்பு!

Saturday, September 24th, 2022

இந்தியாவிலிருந்து தற்போது வருகை தரும் மற்றும் எதிர்காலத்தில் வருவதற்கு தீர்மானித்திருக்கும் இலங்கை அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான  அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நீதியமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், வடமாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பதிவாளர் நாயகத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான இழப்பீட்டு அலுவலகம் 2018 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இழப்பீட்டு அலுவலகச் சட்டத்திற்கமைய  நிறுவப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கூடாக அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

இச்செயற்பாட்டை இலகுபடுத்தும் வகையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்ட செயலகத்தில் தனியான பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு அலுவலக பணிப்பாளர் நாயகம் நசிமா அஹமட் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் குழுக் கூட்டத்தில், அகதிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளான குடியுரிமை பெறுவதில் உள்ள தாமதம், பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள் பெறுவதில் ஏற்படும் தாமதம், நாடு திரும்பும்போது விதிக்கப்படும் அபராதம், மீண்டும் காணிகளை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரதான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டுப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கான உரிமைகள் மற்றும் போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்காமை மற்றும் இந்திய நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அங்கீகாரத் தகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிற சேவைகளை அணுகக்கூடிய வகையில் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும் இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யக் கூடிய அனைத்து இடங்களிலும் எளிய பொறிமுறையை உருவாக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

ஆவணங்கள் தொடர்பான ஆதரவை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் இணைந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வடமாகாணத்தில் நடமாடும் முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்வதற்கும்  இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கொழும்பில் உள்ள பிரதான அலுவலகங்களால் தற்போது கையாளப்படும் குடியுரிமை பெறுவது தொடர்பான ஆவணங்களை மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்றுக்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இந்தியாவில் இருந்து ஏற்கனவே வருகைதந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பான  நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடவும் எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகைதர விரும்பும் அகதிகளை அழைத்து வரும் செயல்முறையை எளிதாக்குவது தொடர்பில் ஆராயவும் இக்குழு தொடர்ந்தும் கூடும் என்பது குறிப்பிடதக்கது.

000

Related posts: