யாழ். மாநகர சபைக்குக் கிடைத்த 12 மில்லியன் ரூபா திரும்பிச் சென்றது!

Friday, January 18th, 2019

யாழ் மாநகர சபைக்கு கடந்த வருடம் கிடைத்த 12 மில்லியன் ரூபா நிதி அதற்குரிய பணிகள் முடிவுறாதமையினால் திரும்பிச் சென்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முத்திரை வரிப்பணம் கிடைக்காத காரணத்தால் அதற்குப் பதிலாக மாகாண ஒதுக்கீட்டின் ஊடாக 65 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட பணத்தில் 27 வட்டாரங்களுக்கும் தலா 1.5 மில்லியன் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த நிதியில் இருந்து மாநகர சபைக்காக 11 மில்லியன் ரூபாவில் டோசரொன்று கொள்வனவு செய்யப்பட்டது. இருப்பினும் எஞ்சிய 14 மில்லியன் ரூபாவில் இரு சந்தைகள் மற்றும் ஓர் ஆயுள்வேத வைத்தியசாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

அவ்வாறு மேற்கொண்ட திட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் நடைமுறைகள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. இவற்றின் அடிப்படையில் உள்ளுராட்சி ஆணையாளரால் இந்தப் பணிகளை நிறைவுறுத்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதனால் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி சகல கணக்குகளும் இடைநிறுத்தப்பட்டு முழுமை செய்யப்பட்ட பணிகள் மட்டும் பரிசீலணை மேற்கொண்டு கணக்குகள் முடிவுறுத்தப்பட்டன.

இதன் காரணமாக 12 மில்லியன் ரூபாவுக்கான பணிகள் முடிவுறுத்தப்படாத காரணத்தினால் பணிகளின் நிதி நிறுத்தப்பட்டது. குறித்த பணம் ஆண்டிறுதிக்குள் செலவு செய்யப்படாவிடின் கண்டிப்பாக திரும்பும் என மாநகர சபையில் பல தடவை பலரும் சுட்டிக்காட்டியபோதும் அது எமது பணம் அதனை திருப்ப முடியாது எனச் சிலர் வாதிட்ட நிலையில் தற்போது நிதி திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: