யாழ்.போதனா வைத்தியசாலையில்  உலங்கு வானூர்தி தளத்துடன் கூடிய அவசர  சிகிச்சை பிரிவுக் கட்டடம்!

Monday, March 7th, 2016

யாழ். போதனா வைத்தியசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் குறிப்பாக தாதியர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. வைத்தியசாலையின் சேவையை மேம்படுத்தி அதன் தரத்தை உயர்த்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இந்த ஆண்டு வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வழங்கும் 6 மாடிக் கட்டடத் தொகுதி அமைக்கும் வேலைகள் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் தளத்தில் உலங்குவானுார்தி இறங்கும் தளம் அமைக்கப்பட உள்ளது.

இதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் 5 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியின் வேலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைவிட மகப்பேற்று விடுதி கட்டடத் தொகுதியும் அமைக்கப்பட உள்ளதால் வைத்தியசாலையானது மிகவும் இட நெருக்கடியான நிலையில் இயங்க வேண்டிய சூழ் நிலையில் உள்ளது.

நாம் ஒரு கலாசாரத்துக்குப் பழக்கப்பட்டுள்ளோம். ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நோயாளியைப் பார்வையிட வருகின்றனர். இதனால் வைத்திய சேவையை வழங்குவதில் நெருக்கடி ஏற்படுகிறது. விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவரைப் பார்வையிட 4 அல்லது 5 பேர் ஒரே நேரத்தில் வருகின்றனர்.

பார்வையாளர் நேரத்தில் விடுதியில் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதால் அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது. நோயாளிக்கு வழங்க வேண்டிய சிகிச்சையில் பாதிப்பு ஏற்படுகிறது. பிரசவ விடுதியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒருதாயை உத்தியோகத்தர்களால் கவனிக்க முடியாமல் போவதுடன் பிரசவத்தின் பின்னர் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

வைத்தியசாலையின் உட்பகுதி நடைபாதையினால்(கொரிடோரினால்) பொதுமக்கள் வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பார்வையாளர் நேரத்தில் அதிக அளவானவர்கள் கூட்டமாகச் செல்வதால் விபத்துக்குள்ளான மற்றும் அவசர சிகிச்சையளிக்க வேண்டிய நோயாளிகளை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு நடைபாதையினால் கொண்டு செல்வதும் மின்உயர்த்தியில் (லிப்ற்றில்) கொண்டு செல்வதும் நெருக்கடி மிக்கதாய் உள்ளது.

பொதுமக்கள் பின்வரும் நேரங்களில் நோயாளர்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். நோயாளிகளைப் பார்வையிடவும் உணவு வழங்கவும் இயன்றளவு இக்காலப்பகுதியில் வருகைதந்து சிறந்த வைத்திய சேவையயை வழங்க ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் பின்வரும் வைத்தியசாலை நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள்,

காலை 06.00 மணி முதல் மு.ப. 06.30 மணி வரை

காலையில் நோயாளர்களுக்கு உணவு வழங்க மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.

மதியம் – நண்பகல் 12.00 மணி முதல் பி.ப. 01.00 மணி வரை

மாலை – பி.ப. 05.00 மணி முதல் பி.ப. 06.00 மணி வரை

விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்காக இதுவரை காலமும் இருந்து வந்த அனுமதி நடைமுறை கடந்த சில மாதங்களாகத் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஒரு நோயாளியை ஒரே நேரத்தில் பலர் பார்வையிட வருவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு நோயாளியின் அருகே இரு பார்வையாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பின்வரும் வைத்தியசாலை நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

  • பார்வையாளர் நேரத்தில் ஒரு நோயாளியைப் பார்வையிட இருவர் மாத்திரம் ஒரு தடவையில் அனுமதிக்கப்படுவார்கள்.
  • இயலாத நோயாளருடன் உதவிக்கு நிற்போர் அவர்களின் கட்டிலில் அமர்வதை தவிர்ப்பதுடன் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம் விடுதிக்கு வெளியில் சென்று அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
  • சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மிக இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் இவர்களை இயன்றவரை வைத்தியசாலைக்கு பார்வையாளர்களாக அழைத்து வருவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
  • மாலை 6.00 மணிக்குப் பின்னர் பொதுமக்கள் எவரும் வைத்தியசாலை விடுதிகளில், ஜய்க்கா கட்டட இளைப்பாறும் இருக்கைகளில், அல்லது வைத்தியசாலையின் வேறு எப்பகுதியிலும் நடமாடுவது தங்கியிருப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
  • நோயாளரைப் பராமரிக்கும் உதவியாளர் மாத்திரம் விடுதியில் நோயாளரின் அருகே மாத்திரம் நிற்பதற்கு அனுமதிக்கப்படுவார்.
  • தீவிர சிகிச்சைப் பிரிவு, அதிதீவிர சிகிச்சைப்பிரிவு, பிரசவ விடுதிகள், குழந்தை விடுதிகள் போன்றவற்றில் சிகிச்சை பெறுபவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்குள் உள்ளதால் இயன்றவரை மேற்படி பகுதிக்கு பார்வையாளர்களாக வருவதைக் குறைத்துக் கொள்ளவும்
  • வைத்தியசாலை வளாகத்தினுள் வெற்றிலை, போதைப்பொருள், புகையிலை மற்றும் மதுபானம் பாவித்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையினுள் பொது இடங்களில் துப்புவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சுவிங்கம் போன்றவற்றை உமிழ்ந்து வருவதையும் தவிர்த்துக் கொள்ளவும்.
  • வைத்தியசாலைக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள் தமது தேவைக்கும் நோயாளர்களின் தேவைக்குமென எடுத்துவரும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், இளநீர்க் கோம்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை வைத்தியசாலை வளாகத்தில் விட்டு செல்லாது தம்முடன் எடுத்துச் செல்லுமாறு கேட்கப்படுகின்றீர்கள். குப்பைகூழங்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அதற்குரிய கழிவுக்கூடையினுள் இடுதல் வேண்டும்.
  • வைத்தியசாலை விடுதியில் பாவனைக்குத் தேவையான மிகவும் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வைத்திருக்கவும்.
  • நடைபாதையில் நிற்பதையோ நடைபாதையில் நின்று தொலைபேசியில் உரையாடுவதையோ அல்லது நடைபாதையில் இருப்பதையோ தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
  • வைத்தியசாலைக்கு வருபவர்கள் நகைகள் அணிந்து வருவதையும் பெறுமதிமிக்க உடைமைகளைக் கொண்டுவருவதையும் தவிர்த்துக் கொள்ளவும்.
  • தலைக்கவசம் மற்றும் பயணப்பைகள், பொதிகள், சொப்பிங்பை போன்றவற்றை வைத்தியசாலைக்குள் கொண்டு வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பயணப்பைகள் பொதிகள் எடுத்துவரப்படும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பரிசோதனை செய்வார்கள்.
  • வைத்தியசாலையானது பலர் தங்களது கடமைகளைச் செய்யும் பகுதி. எனவே பொருத்தமான உடைகளை அணிந்து வரவேண்டும். குறிப்பாக ஆண்கள் அரைக் காற்சட்டையுடன் வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பொதுமக்களையும் நோயாளிகளையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கறுப்புக் கண்ணாடி அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்

  • வைத்திய விடுதியில் உடமைகள் மற்றும் பொருட்களை நிர்வாகத்தின் அனுமதியின்றி கையாள்வதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
  • கையடக்க தொலைபேசிகளை மிகவும் அத்தியாவசியமான சந்தர்ப்பத்தில் மட்டும் பாவிக்கவும். இதற்கு விடுதியில் மின்னேற்றுதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • வைத்தியசாலை வளாகத்தினுள் மதுபானம், வெற்றிலை, போதைப்பொருட்கள் பாவித்தல் மற்றும் புகைத்தல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வைத்தியசாலை பணியாளர்களும் உங்கள் உறவுகளே. அவர்களுடன் முரண்படுதல், வாக்குவாதம் செய்தலைத் தவிர்த்து அன்புடன் பழகுங்கள். உங்களுக்கு வழங்கப்படும் பணிகள், சேவைகளில் ஏதாவது அசௌகரியம் ஏற்படுமிடத்து அதை நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ பணிப்பாளருக்கு அறியத்தாருங்கள். இதற்கு தகுந்த நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும்.
  • வீடு செல்வதற்கு வைத்தியர்களினால் தீர்மானிக்கப்பட்டவர்களது நோய்நிர்ணய அட்டை எழுதப்பட்டு மதியம் 12.00 தொடக்கம் 1.00 பி.ப மணி வரை அல்லது மாலை 4.00 மணிக்கு பின்னரே வழங்கப்படும். அதுவரை வைத்தியரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்யாது இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  • நீங்கள் குணமடைந்து வீடு செல்லும் போது உங்களுக்கு வழங்கப்படும் நோய் நிர்ணய அட்டையினை வைத்தியரிடம் பெற்றுக்கொள்வதுடன் உங்களுக்கு தேவையான விவரங்களை வைத்தியர்கள் மற்றும் தாதியர்களிடம் தெளிவாக கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
  • மீள் பார்வைக்காக விடுதிக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுமாயின் காலை 7 மணிக்கே சமூகம் தரவும்.
  • விடுதியினை விட்டுச்செல்லும் போது நீங்கள் பாவித்த தேவையற்ற பொருட்களை அதற்குரிய கழிவு வாளிகளில் இட்டுச் செல்லுங்கள்.

எனவே பொது மக்கள் வைத்தியசாலையின் நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி தமது உறவினர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க ஆதரவாக இருக்க வேண்டும்.

Related posts: