யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல் வயல்களின் விவரங்கள் கணினி மயப்படுத்தப்படுகின்றன!

Sunday, March 4th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்கள் கிராம அலுவலர் பிரிவு வாரியாக பதிவு செய்யப்பட்டு வரைபடத்தோடு கூடிய நிலையில் கணினி மயப்படுத்தப்படுகின்றன.

பதிவு செய்தல் மற்றும் கணினி மயப்படுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் பிராந்திய கமநல சேவை நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

வயல்நிலங்கள் தொடர்பான பதிவுகள், வரைபுகளை பொதுமக்கள் மற்றும் காணிகளின் உரிமையாளர்கள் பார்வையிடுவதற்கு வசதியாகவும் பதிவுகள் தொடர்பான ஆட்சேபனை முறையீடுகளைத் தெரிவிப்பதற்கு வசதியாகவும் 15 தினங்கள் பகிரங்கமாக கமநல சேவை நிலையங்களில் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் எழுத்துமூலமான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கமநல சேவை நிலைய பெரும்போக பொறுப்பதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பயிர்ச் செய்கை நிலையங்களின் பதிவுகள் வரைபுகள் தாழ்நிலங்கள் (வயல்கள்) மேட்டுநிலங்கள் என்ற வகையில் இரண்டு பிரிவுகளாக மேற்கொள்ளப்படுகின்றன. முதற்கட்டமாக தாழ்நிலம் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டமாக மேட்டு நிலங்கள் என்ற வகையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் தோட்ட நிலங்கள் பதிவுகள், வரைபுகள் மேற்கொள்ளப்பட்டு கணினி மயப்படுத்தப்படவுள்ளன. பதிவுகளை கணினி மயப்படுத்துவதன் மூலம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலத்தின் அளவுகளை திருத்தமாக மதிப்பீடு செய்வதுடன் விவசாயிகளுக்கு உரமானியக் கொடுப்பனவு மற்றும் உதவிகளையும் திருத்தமான முறையில் மேற்கொள்ள முடியும். அத்துடன் முறைகேடுகளையும் தவிர்த்துக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.

Related posts: