யாழில் அதிகரித்துவரும் கற்றாளைக் கடத்தல்கள்!

Tuesday, January 8th, 2019

மருத்துவக் குணமுடைய இயற்கை மூலிகையான கற்றாளைக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது கற்றாளைக் கடத்தல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களும் உள்ளுர் வாசிகளும் கற்றாளையைப் பிடுங்கி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தீவகம் உள்ளிட்ட இடங்களில் கற்றாளைக் கன்றுகளைப் பிடுங்கிச் செல்வோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொன்னாலையில் கற்றாளைக் கன்றுகளைப் பிடுங்கி வாகனத்தில் ஏற்றிச் செல்ல முற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

சிறியரக வாகனத்தில் வருகை தந்த தென்னிலங்கைச் சிங்களவர்களால் நால்வர் பொன்னாலை மயானத்துக்குச் செல்லும் வீதியில் கற்றாளைகளைப் பிடுங்கியுள்ளனர். அவற்றை வவுனியாவில் உள்ள பாம் ஒன்றுக்கே கொண்டு செல்வதாகக் கூறியதுடன் குறிப்பிட்டளவான கற்றாளைகளை பிடுங்கிச் செல்ல அனுமதிக்குமாறும் தென்னிலங்கை வாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் பிடுங்கிய கற்றாளைகள் மட்டும் கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டது.

மருத்துவத் தேவைக்கு கற்றாளைகளைக் கொண்டு செல்வதாயின் வலி, மேற்குப் பிரதேச செயலகத்தில் அனுமதி பெற்று வாருங்கள் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள மரக்கன்று விற்பனை பண்ணைகளில் ஒரு கற்றாளைக்கன்று 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

Related posts: