பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்லும் சட்டம் நடைமுறைக்கு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அிவிப்பு!

Thursday, December 30th, 2021

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிமுதல், தனியார் மற்றும் அரச பேருந்துகளின் ஆகக்குறைந்த கட்டணத்தை 3 ரூபாவினாலும், ஏனைய கட்டணங்களை 17 சதவீதத்தினாலும் அதிகரிக்க நேற்றையதினம் (29) தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் எரிபொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 14 ரூபாவிலிருந்து 17 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சில் நேற்று (29) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால், இந்தக் கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது.

அனைத்து வீதிகளின் தூரத்திற்கு அமைய, அறவிடப்படவேண்டிய கட்டணங்கள், எதிர்வரும் மூன்றாம் அல்லது நான்காம் திகதி அறிவிக்கப்படும்.

இந்தக் கட்டண அதிகரிப்பானது, ஆசனங்களில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கானதாகும். பயணிகளை, நின்றவாறு போக்குவரத்தில் ஈடுபடுத்த இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே, நின்றவாறு பயணிக்கும் பயணிகளுக்கான ஆகக்குறைந்த கட்டணம், 12 ரூபா என்ற அளவிலேயே தற்போதும் உள்ளது. இந்தக் கட்டணத்தை அதிகரிக்க முடியாது.

ஏனெனில், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மேலதிக பயணிகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது.

எனினும், சில வீதிகளில் பயணிகளை நின்றவாறு போக்குவரத்தில் ஈடுபடுத்துகின்றனர் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதுடன், பயணிகளுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும்.

எனவே, பொலிசாரின்மூலம் இதனைக் கண்காணிப்பதுடன், இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: