அதிகரித்துவந்த உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தியது கொரோனா – இலங்கை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Wednesday, April 15th, 2020

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித உயிர்களை பலியெடுத் துவரும் நிலையில் அதன் கோரப்பிடிக்குள் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 26 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. இலங்கையிலும் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், ஏனைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாளொன்றுக்கு இடம்பெறும் உயிரிழப்பு விகிதம் கொரோனாவால் 99 சதவீதம் குறைந்துவிட்டது என்று மருத்துவத்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 23 வாகன விபத்துகள் இடம்பெறுகின்றன என்றும், அவற்றால் குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழக்கின்றனர் என்றும், பலர் காயமடைகின்றனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த பங்குனி 20 ஆம் திகதிமுதல் இலங்கையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்டதுடன் அத்தியாவசிய சேவைகளைத் தவிர ஏனைய விடயங்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவத்தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடைமுறைகள் காரணமாக வாகன விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழப்பவர்கள், காயமடைபவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் குறைந்துவிட்டது என்றும், ஓரிரு சம்பவங்கள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே கடந்த காலங்களில் புத்தாண்டு காலப்பகுதியில் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் பதிவாகிவந்திருந்த நிலையில் இம்முறை அந்நிலைமை இல்லாது போனமை மகிழ்ச்சிக்குரியது என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: