மைதானத்தில் அடித்துக் கொலை ; வழக்கின் தொடர் விசாரணைகள் மேல் நீதிமன்றில் ஆரம்பம்!

Wednesday, May 31st, 2017

வட்டுக்கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பத்தலைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தொடர் விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆரம்பமானது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் யாழ்.சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு இடையே இடம்பெற்ற வருடாந்தக் கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பத்தலைவரும் பற்றிக்ஸ் கல்லூரின் பழைய மாணவனுமான அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில்  6 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கின் தொடர் விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று ஆரம்பமாகின. கடந்த வழக்கின் போது நடைபெற்ற 3ஆம் எதிரியின் சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையுடன் வழக்கு ஆரம்பமானது.

2ஆம் சாட்சியான அமலசிங்கம் துசிந்தன் சாட்சியமளிக்கையில், இரு கல்லூரிகளுக்கும் இடையேயான கிரிகெட் போட்டி இடம்பெற்றது. நானும் சுதாஸ்கரன், அன்ரனி விமல்ராஜ் மற்றும் அமலனும்  போட்டியைப் பார்க்க 2 மோட்டார் சைக்கிளில் சென்றோம். முற்பகல் 11 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் சம்பவம் நடைபெற்றது. அந்த வேளையில் நாங்கள் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

எனது நண்பன் அமலனை 6 பேர் அடித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அவரைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எனினும் அமலன்  மூச்சுப்பேச்சற்றவராக இருந்தார். அவரை அடித்தவர்கள்  யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள். ஏனெனில் அவர்கள் அந்தக் கல்லூரியின் கொடியை வைத்திருந்தார்கள். அமலனுக்கு அடித்தவர்களை நான் மைதானத்தில் பார்த்தேன். அடையாள அணி வகுப்பிலும் அவர்களில் ஐந்து பேரை அடையாளம் காட்டினேன்.

சாட்சி எதிரிக்கூண்டுக்குள் நின்ற முதலாம், இரண்டாம், மூன்றாம், ஆறாம் எதிரிகளை அடையாளம் காட்டினார். நான் பார்க்கும் போது அமலனுக்கு முதலாவது எதிரியான மதுசன் அடித்துக்கொண்டிருந்தவர். இந்த ஐந்துபேரும் அடிச்சுக்கொண்டு இருந்தவர்கள். அவர்களின் பெயர்கள் தெரியவில்லை.  ஆகவே தனித்தனியாக சொல்ல முடியவில்லை. அமலன் திரும்பத் தாக்கவில்லை. இவர்கள்தான் அமலனைத் தாக்கினார்கள். நான் போய் அமலனைத் தூக்கும் போது அவனுக்கு மூச்சுப் பேச்சு எதுவும் இருக்கவில்லை.  அமலனுக்கு அடித்தவர்களில் இரண்டு பேர் வளையமுடியாத பைப் வைத்திருந்தார்கள். றம் அடிக்கும் தடியாலும் அவர்கள் அடித்தார்கள். அமலனுக்கு அவர்கள் சுற்றி நின்று அடித்தார்கள். அம­லன் அடியை வாங்கிக் கொண்டுதான் நின்றான். அவன் எதுவுமே செய்யவில்லை என்று சாட்சியமளித்தார். வழக்கின் தொடர் விசாரணைகள் இன்று இடம்பெறும்.

Related posts: