எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை நீக்க கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தொடர்பான தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொடர்ச்சியான நட்டத்தின் காரணமாக செயற்பாடுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமங்கள் காரணமாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதாந்தம் ரூ. 551 மில்லியன் இழப்பைச் சந்திப்பதாகவும், மேலும் கடந்த ஆண்டு ரூ.83 பில்லியன் இழப்பைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தை சந்திக்கும் பட்சத்தில் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் அல்லது எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தவறினால் எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டொலர் நெருக்கடியால் எரிபொருள் இறக்குமதிக்கான நிதியை விடுவிக்க முடியாதுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ஜனவரி மாதம் எழுத்து மூலம் தமக்கு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலுக்கு 42 ரூபாயும், 95 Octane பெற்றோலுக்கு 64 ரூபாயும், டீசலுக்கு 17 ரூபாயும், சுப்பர் டீசலுக்கு 39 ரூபாயும் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரிகள் மூலம் நிதி அமைச்சு நாளாந்தம் 367 மில்லியன் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரிகள் நீக்கப்பட்டால், நாளாந்த நஷ்டத்தில் ஒரு பகுதியை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஈடுகட்ட முடியும், எனவே பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இந்த முறையில் நஷ்டத்தை ஈடுகட்ட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: