மின்னல் தாக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

Monday, May 21st, 2018

நாட்டில் தற்போது நிலவிவரும் தென்மேற்குப் பருவ மழையுடன் கூடிய காலநிலையால் பெரும்பாலான மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் இடியுடன் கூடிய கடும் மழையை மேல் மாகாணம், தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய மாகாணங்களில் எதிர்பார்க்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், பெரும்பாலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்க முடியும்.

இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் அதிகமான அதாவது 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

இதேவேளை இடியுடன் கூடிய மழைபெய்யும் போது வலுவான காற்று வீசக்கூடும். இந்நிலையில் இடி மின்னல் வேளைகளில் பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts: