மாணவி கடத்தல்: எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Wednesday, March 9th, 2016

2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து இன்று(09)  தீர்ப்பளித்துள்ளார்.அத்துடன் 30 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெரியவருவதாவது –

2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவரை அதிகாலை 3 மணிக்கு கடத்திச் சென்று முல்லைததீவில் வைத்து பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக மார்க்கண்டு செல்வகிருஸ்ணன் அல்லது செல்லப்பா என்ற 3 குழந்தைகளின் தந்தையான 35 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

எதிரி பிணையில் விடப்பட்ட நிலையில் இந்தியாவுக்குத் தப்பியோடி அங்கு ஒளிந்து வாழ்கின்றார். இதனால் எதிரியின்றி வழக்கு விசாரணை நடைபெற்றது.

கடத்தல் சம்பவம் நடைபெற்றபோது, அந்த மாணவி 15 வருடங்கள் ஒரு மாத வயதுடையவராக இருந்தார்.பாதிக்கப்பட்ட இந்த மாணவி தனக்கு நேர்ந்தது என்ன என்பதைத் தனது சாட்சியத்தில் நீதிமன்றத்திற்கு விளக்கிக் கூறினார்.

‘எதிரி, முதலில் என்னை மன்னாருக்குக் கூட்டிச் சென்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்ததன் பின்னர் முல்லைத்தீவுக்குக் கூட்டி வந்தார். அங்க 38 நாட்கள் இருந்தோம். அப்போது அவர் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய  முயற்சித்தபோது, நான் அதற்கு உடன்படவில்லை. அவரை நான் எதிர்த்து நின்றேன். ஆயினும் எனது எதிர்ப்புக்கு மத்தியிலும் 6 தடவைகள் அவர் என்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார்.

‘நாங்கள் முல்லைத்தீவில் இருந்தபோது 40 ஆவது நாள் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அயல் வீட்டில் எனது பெற்றோர் வந்து என்னைத் தேடியபோது, என்னை அறையில் இருந்த அலுமாரிக்குள் ஒளிந்திருக்குமாறு எதிரி கூறினார்.

நான் அதற்கு உடன்படவில்லை. எனது பெற்றோரிடம் ஓடிச் சென்றேன். பின்னர், முல்லைத்தீவு பொலிசாரினால் நாங்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டோம். அங்கு விசாரணைகள் நடைபெற்றன என்று பாதிக்கப்பட்ட பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் சாட்சியமளிக்கையில், பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதை உறுதிப்படுத்தினார்.

சம்பவம் நடைபெற்ற அந்த இரவு தமது சகோதரியாகிய அந்த மாணவி தங்களுடன் நித்திரை கொண்டதாகவும் மறுநாள் காலை அவரைப் படுக்கையில் காணவில்லை என்றும் அவர் கடத்திச் செல்லப்பட்டதைப் பின்னர் அறிந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதர சகோதரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் கூறினர்.

வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களை அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி நெறிப்படுத்தினார்.

விசாரணையின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:

பதினாறு வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளையைப் பாதுகாவலரின் அனுமியின்றி அழைத்துச் செல்வது ஆட்கடத்தல் குற்றமாகும். அதேநேரம்,16 வயதுக்குக் குறைந்த சிறுமியை அவருடைய சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ பாலியல் துஷ்பிரயோகம் செய்வது  தண்டனைக்குரிய குற்றமாகும் என தண்டனைச் சட்டக் கோவை கூறுகின்றது.

இந்த வழக்கில் சம்பவ தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு 16 வயதுக்குக் குறைந்த பள்ளி மாணவியை கடத்தி எதிரி ஆட்கடத்தல் குற்றம் புரிந்துள்ளார். அத்துடன் 16 வயதுக்குக் குறைந்த அந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் மூலம் பாலியல் வல்லுறவு குற்றத்தையும் புரிந்துள்ளார்.

விசாரணையின்போது சாட்சியங்களின் மூலம் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய இரண்டு குற்றங்களையும் எதிரி புரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எதிரியைக் குற்றவாளியாகக் கண்டுள்ள இந்த நீதிமன்றம் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டமும் கட்டத்தவறினால் ஒர் ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கின்றது.

பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் பாலியல் வல்லுறவு கொண்ட குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் தண்டப்பணமும் கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்ச ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும். தவறினால் 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என
இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.

குற்றம் சாட்டப்பட்ட எதிரி இந்தியாவில் இருப்பதாக மன்றில் சாட்சியமளிக்கப்பட்டிருப்பதனால், சர்வதேச பொலிசாரின் ஊடாக அவரைக் கைது செய்யுமாறு பகிரங்கப் பிடியாணை பிறப்பித்து பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடப்படுகின்றது.

அதேபோன்று சார்க் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையைப் பாவித்து, இந்தியாவால் உள்ள எதிரியை நாடு கடத்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்து எதிரியை இலங்கைக்கு நாடு கடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

Related posts: