மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பெற்றோர்களும், எங்கள் சமூகமும் உரிய கவனம் செலுத்த வேண்டும்!

Thursday, November 3rd, 2016

வாசிப்புப் பழக்கம் தற்போதைய இளைய சமூகத்தினரிடையே அருகி வருவதற்குத் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளப் பாவனை, தொலைபேசிப் பாவனை போன்றன காரணங்களாகஅமைந்துள்ளது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகள் எம்மத்தியில் அதிகரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பெற்றோர்களும், எங்கள் சமூகமும் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆர். இரவீந்திரன்.

மனித உன்னதத்தை நோக்கிய சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி முறைக் கண்காட்சி நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(01-11-2016) முற்பகல்-10 மணியளவில் யாழ். சன்மார்க்க வித்தியாலயத்தில் ஆரம்பமாகிய போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அரசசார்பற்ற நிறுவனமொன்று வவுனியாவிலும், அனுராதபுரம் போன்ற சிங்களப் பகுதிகளிலும் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒரு நிமிடத்தில் எத்தனை சொற்களை வாசிக்கிறார்கள் என ஆய்வொன்றை மேற்கொண்டு முடிவை வெளியிட்டார்கள். வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற ஆய்வில் ஒரு நிமிடத்தில் சராசரியாக 39. 9 வீதமான சொற்களைத் தான் எங்களுடைய பிள்ளைகள் வாசிக்கிறார்கள் என அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது.

அதேவேளை வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து ஆய்வு மேற்கொண்ட போது  அங்குள்ள தரம்-02 மாணவர்கள் ஒருநிமிடத்தில் சராசரியாக 56 சொற்களை வாசிக்கிறார்கள். ஆகவே, இதிலிருந்து நாங்கள் வாசிப்பில் பின்தங்கிய நிலையில் காணப்படுவது புலப்படுகிறது என்றார்.

BOOK

 

Related posts: