மாகாண விவசாயப் போதனாசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Tuesday, March 13th, 2018

வடக்கு மாகாணத்தில் விவசாயத் திணைக்களங்களில் நிலவும் விவசாயப் போதனா ஆசிரியர் வெற்றிடங்களுக்கு துறைசார்ந்த பட்டதாரிகளையும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாகாண விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்துக்கான விவசாயப் போதனாசிரியர் வெற்றிடங்கள் நீண்டகாலம் நிரப்பப்படாமல் உள்ளன. அனுமதிக்கப்பட்ட 143 இல் 47 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்றவர்கள் இதற்கான இரண்டு ஆண்டு டிப்ளோமா பயிற்சியை முழுமை செய்திருத்தல் வேண்டும். வவுனியா மற்றும் கண்டியில் இந்த இந்த டிப்ளோமா கற்கை நெறியை கற்க முடியும். ஆனால் உயர்தரத்தில் விஞ்ஞானத் துறையில் கற்றவர்கள் இந்த கற்கை நெறியை கற்பதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை.

இதனால் போதனாசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது கடினமாக காணப்படுகின்றது. ஆகவே இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு டிப்ளோமா முழுமை செய்தவர்களும் மற்றும் துறை சார்ந்த பட்டதாரிகளும் உள்வாங்கப்படுவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

துறைசார்ந்த பட்டதாரிகளை உள்வாங்குவது தொடர்பில் சேவை பிரமாணக் குறிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு ஆளுநரின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஆகவே இந்தமுறை விவசாயப் போதனாசிரியர் உள்வாங்கும் செயற்பாட்டுக்கு டிப்ளோமா நிறைவு செய்தவர்களுடன் துறை சார்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்பு தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: