மழையால் சிறுதானியங்கள் அழிவு: விவசாயிகள் கவலை!

Thursday, May 19th, 2016

நாட்டில் சில தினங்களாக பெய்த மழையால் வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் வயல் நிலங்களில் பயிரிடப்பட்ட வெங்காயம், மிளகாய், கச்சான், சனல், எள்ளு போன்ற சிறுதானியங்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் காலபோக அறுவடையைத் தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் வயல் நிலங்களில் வெங்காயம், மிளகாய், கச்சான், சனல், எள்ளு போன்ற சிறு தானியங்களினைப் பயிரிடுவது வழக்கம்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் சுதுமலை, மானிப்பாய், நவாலி, சங்கரத்தை, பண்டத்தரிப்பு, வடலியடைப்பு ஆகிய இடங்களிலுள்ள வயல் நிலங்களில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டிருந்தன.

கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வயல் நிலங்களில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது. இதனால், பயிரிடப்பட்ட சிறு தானியங்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன. இதேவேளை, இடையிடையே வீசிய காற்றினால் வாழை மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

 

Related posts: