மனிதனை கொல்லும் பயங்கர நோய்!

Wednesday, March 8th, 2017

இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகவும், அமைதியாக மனிதனைக் கொல்லும் பயங்கர நோயாகவும் சீனி நோய் உள்ளதாக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும், ஆயுர்வேத வைத்தியசாலையின் அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவின் நடமாடும் வைத்திய சேவை இன்று (07) வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தலைமையில்

இடம்பெற்றது. இதன்போதே வைத்தியர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு தனிநபரும் தனது வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

அதற்கு ஆதரவாகவும் பாரிய பங்களிப்பையும் ஏற்படுத்தும் நோக்கில் சுதேச மருத்துவம் பாரிய சேவையை நோயாளர்களுக்கு செய்து வருகின்றது.

அதன் முதற்கட்டமாக ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவின் நடமாடும் சேவையை இன்று ஆரம்பித்து வைத்துள்ளோம் என்றார்.

இன்றைய நடமாடும் சேவையில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இன்று மட்டும் சீனி பரிசோதனை மேற்கொண்டதில் 175 பேருக்கு சீனி வியாதி இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகவும் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

Related posts: