பொது எதிரியை எதிர்த்து நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் – நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கப்படும் என பங்களாதேஷ் பிரதமர் அறிவிப்பு!

Monday, June 6th, 2022

பங்களாதேஷில் மக்கள் தொகை அதிகம் உள்ள போதிலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்குவதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் எசல வீரகோனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையைச் சேர்ந்த எசல வீரகோன், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தொற்றுநோயும் காரணம் என்றும் பங்களாதேஷ் இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவைப் பாராட்டுவதாகவும் கூறினார்.

அத்தோடு, அரிசி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால், இலங்கைக்கு தற்போது உரம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும், இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கலாம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி ஆகியவற்றுக்கு தீர்வாக பங்களாதேஷ் மேலும் பயிரிட நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வகையான விதைகளை பரிசோதித்து வருவதாகவும் தெற்காசியாவின் பொது எதிரியான வறுமையை எதிர்த்து நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: