உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அனைத்துத் தரப்பினரும் அணி திரள வேண்டும் : சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!

Tuesday, September 13th, 2016

ஆசியாவின் முதலாவது பெண்கள் பாடசாலை என்ற பெருமையை தன்னகத்தே கொண்டதான உடுவில் மகளிர் கல்லூரியில் தற்போது இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் மிகவும் மனவேதனையைத் தருகின்றன. உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அனைத்துத் தரப்பினரும் அணி திரண்டு நியாயத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டும் எனவும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி அமைப்பு  நேற்றுத் திங்கட்கிழமை(12) பிற்பகல்  ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேற்படி ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இப்பாடசாலையின் மாணவர்களினதும், பெற்றோர் நலன்விரும்பிகளினதும், பழைய மாணவர்களினதும் கோரிக்கைகள் நியாயமானவையும், கருத்தில் எடுக்கப்பட்டு சரியான முறையில் தீர்வு காணப்பட வேண்டியவையுமாகும். ஆனால், அமைதியான முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மாணவிகளை மிரட்டியும், உதாசீனப்படுத்தியும், அவர்கள் மீது வன்முறையைப் பாவிக்க முற்பட்டமை கண்டிக்கத்தக்கதும், தவிர்க்கப்பட  வேண்டியதுமாகும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கச் செய்வது சமூக அக்கறையுள்ள அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்.

அத்துடன் மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கின்ற வகையிலும், அவர்களின் ஆளுமை விருத்திக்குப் பங்கமேற்படுகின்ற விதமாகவும் மத நிறுவனங்களினதோ, அரசியல் சக்திகளினதோ தலையீடு அமைதல் தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, இவ் விவகாரத்தில் பாடசாலையில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு நியாயத்திற்காகக் குரல்கொடுக்கவேண்டும் என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1

Related posts:

‘குடு’ காரர்களே காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் - கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம...
நான்கு நாள் பயணமாக சீனாவின் உயர் அதிகாரி இலங்கை வருகை – இலங்கையின் உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துர...
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் ...