பேருந்து சாரதி மீது பயணியொருவர் தாக்குதல்!

தட்டாதெருச் சந்திப் பகுதியில் வைத்து நிதானமின்றிய நிலையில் பயணித்த பிரயாணி ஒருவர் பேருந்து சாரதி ஒருவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் இ.போச.பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து மருதனார்மடம் ஊடாக காங்கேசன்துறை செல்லும் 782/4 ஆம் இலக்க பேருந்து நேற்று (13) பிற்பகல் யாழ் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. பேருந்தில் பிரயாணம் செய்த பிரயாணி ஒருவர் நிதானமின்றிய நிலையில் ஏனைய பயணிகள் மீது தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் குறித்த பிரயாணியை பேருந்தில் இருந்து இறக்கிவிட நடத்துநர் முயற்சித்த போதும் அவர் முரண்டு பிடித்ததால் சாரதியும் நடத்துநரும் இணைந்து அவரை தட்டா தெருச் சந்தியில் வைத்து கீழிறக்கி விட்டு பேருந்தில் ஏற முற்பட்ட போது குறித்த பிரயாணி பாரிய கல் ஒன்றினை எடுத்து சாரதி மீது எறிந்துள்ளார். இதன்போது கல் சாரதியின் பின் தலைப்பகுதியில் பட்டு அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த சக பயணிகள் குறித்த பிரயாணியை நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த பிரயாணியைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தினால் நேற்றைய தினம் பிற்பகல் தட்டாதெரு சந்திப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|