பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை – இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் தெரிவிப்பு!.

Wednesday, September 20th, 2023

கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் இலங்கை மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ள பங்களாதேஷ் பிரதமர் அந்த கடனை செலுத்த முடிந்துள்ளதன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் தெளிவாகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ன்று நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்வதன் ஊடாக இலங்கை சுமூகமான நிலைமையை அடைந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இணைக் காரியாலயத்தில் யு.எஸ்.எய்ட் அமைப்பின் பிரதானி சமந்தா பவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கை நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த போது யு.எஸ்.எய்ட் அமைப்பு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டதன் பின்னரான செயன்முறைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பயிற்சி பெற்ற பணியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பிலான சவாலுக்கு முகம்கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளமையின் பலன்களை அடைந்துகொள்ள இன்னும் இரண்டு வருடங்கள் அவசியப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செயற்பாடுகளை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் யு.எஸ்.எய்ட் அமைப்பின் பிரதானி சமந்தா பவரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: