புத்தளம் மாவட்ட மீன்வளத்துறை திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்!

Sunday, October 30th, 2016
புத்தளம் மாவட்ட மீன்வளத்துறை திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுருக்கு வலைகள் உட்பட தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு அத்தடையை பாராளுமன்றத்தில் சட்டமாக்கப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்;

கடந்த வெள்ளிக்கிழமை அண்மையில் புத்தளம் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்களுடன் புத்தளம் காரியாலயத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

இதன்போது புத்தளம் மீன் வளத் திணைக்களத்தால் சுருக்கு, லைலா வலைகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாவிக்கும் மீனவர்கள், படகுகள் அவர்களது உபகரணங்கள் கைப்பற்றப்படுகின்றன. ஆனால் இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலலை.

மாறாக மீனவர்களிடம் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு புத்தளம் மீன்வள காரியாலய அதிகாரிகளால் விடுவிக்கப்படுகின்றனர் என இப் பேச்சுக்களில் கலந்து கொண்ட மீனவர்கள் என்னிடம் புகார்களை  முன்வைத்தனர்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய நான் புத்தளம் மீனவர் காரியாலயத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டேன்.

அத்தோடு மீனவர்கள் தங்களது புகார்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு தெரிவித்ததோடு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு அத்தருணத்தில் ஆலோசனை வழங்கினேன்.

அது மட்டுமல்லாது சுருக்கு, லைலா வலைகள், உட்பட தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பட்டியலிட்டு அமைச்சரவைக்கு அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு அதனை பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைத்து சட்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளேன்.

அத்தோடு இனிமேல் புத்தளம் பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்கள் “டைனமைட்” பாவித்து பிடிக்கப்படுகின்றவா என்பது தொடர்பில் பரீட்சித்து தடை செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினர், கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் என விசேட கண்காணிப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

timthumb

Related posts: