சேவையில் இணையுமாறு வடக்கு யுவதிகளுக்கு யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அழைப்பு!

Saturday, May 6th, 2017

வடக்கு மாகாணத்தில் பெண் பொலிசார் பற்றாக்குறையாக உள்ளதாகத் தெரிவித்திருக்கும் யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, பொலிஸ் சேவையில் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஊடகவியியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையில் புதிதாக ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலும் விடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பப்படிவங்கள் பொலிஸ் நிலையங்களிலும் புத்தகசாலைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

பொலிஸ் சேவையில் இணைய விரும்புபவர்கள் மேற்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான கால எல்லை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தமிழ் பொலிசார் குறைவாக இருந்த நிலையில் கடந்த வருடங்களில் பலர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனாலும் தமிழ் பெண் பொலிசார் தற்போதும் போதுமான எண்ணிக்கையில் இல்லை.  புதிதாக பொலிசார் சேவையில் ஆட்கள் இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்ற நிலையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யுவதிகள் அதிக எண்ணிக்கையில் இணைந்து கொள்ள வேண்டும். என்றார்.

Related posts: