பாசையூர் மீனவர்களின் வலையில் இரவு வேளைகளில் மீன்கள் திருட்டு – முறையிட்டும் பயன் இல்லை!

பாசையூர் மீனவர்கள் தொழிலுக்குப்போட்ட வலைகளில் அண்மைக்காலமாக அயல்பகுதி தொழிலாளர்கள் மீன்களை திருடி வருவதாக பாசையூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடலினை நம்பி தொழில் செய்யும் எம் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஒருகரை, பள்ளிக்குடா, மண்டைதீவு. பாலைத்தீவு மற்றும் பாசையூர் உள்துறைப் பகுதிகளில் மீன்களுக்காக விரித்து விட்டு வரும் கலங்கண்டி வலைகளில் உள்ள மீன்களை அயல் பகுதி மீனவர்கள் இரவு நேரங்களில் திருடிச் செல்கின்றனர்.
அயல் கிராம மீனவ சங்கங்களுக்கு இவ்விடயம் தெரிந்தும் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் செயற்படுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு மீன்கள் திருடப்படுவதனால் படகுக்கான எரிபொருள் செலவுகள் கூட மீட்டுக் கொள்ள முடியாத நிலை உள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வியாழக்கிழமை வலை விரித்து விட்டு வந்தால் சனிக்கிழமையே மீன்களை எடுப்பதற்கு செல்வது வழமை. வெள்ளிக்கிழமை தொழில் செய்வதனை பாசையூர் மீனவர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நேரங்களில் இத்திருட்டுக்கென செல்லும் குறிப்பிட்ட மீனவர்கள் இம் மிலேச்சத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஹர்த்தால் தினத்தன்று தொழிலுக்கு போட்ட வலைகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீன்கள் திருட்டு போயிருந்ததாக பாசையூர் மீனவர்கள் சுட்டிககாட்டுகின்றனர். இதனால் தொழில்வளம் குன்றி கைவிடும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். மேலும் பொருளாதார ரீதியிலும் மனரீதியிலும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாசையூர் மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Related posts:
|
|