பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

Monday, August 29th, 2016

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள  பரிந்துரைகள் மற்றும் வழிக்காட்டுதல்களை இலங்கை புலனாய்வு பிரிவு மீறி செயற்படுவதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி லக்சான் டயஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை முன் அனுமதியின்றி சட்டத்தரணிகள் சந்திக்க முடியுமென ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது எனினும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐயாத்துரை மோகதாஸ் எனும் சந்தேகநபரை சந்திக்கும் அவகாசத்தை பொலிஸார் மறுத்து வருவதாக குற்றம்சாட்டிய சட்டத்தரணி லக்சான் டயஸ், எனினும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியின் அனுமதி அவசியமெனக் கூறியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதன் மூலம் ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட வழிக்காட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணி லக்சான் டயஸ் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள  பரிந்துரைகள் மற்றும் வழிக்காட்டுதல்களை புலனாய்வு பிரிவு மீறியுள்ளது.

சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்களை அனுகமுடியும். எனினும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை முன் அனுமதியின்றி சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு இடமளிக்கப்படுவது இல்லை. அதற்கு அனுமதி கடிதம் கேட்கிறார்கள்.

இது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் அறிவித்தல்களுக்கு முரணான விடயம். இது பொலிஸ் மாஅதிபரின் உயர் நீதிமன்றத்துடனான இணக்கப்பாட்டிற்கு முரணான விடயம். இங்கு இரண்டு பொலிஸ் சேவைகள் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எனக்கு காணப்படுகின்றது. காரணம் இவர்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி செயற்படுகின்றார்கள். சந்தேகநபர்களை சந்திக்க காலதாமதம் ஏற்படுகின்றது.

இது தொடர்பில் நான் பலமுறை முறைப்பாடு செய்துள்ளேன் எனினும் எவ்வித பிரயோசனமும் இல்லை. ஆகவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாவிடின் பான் கீ மூன் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் சட்டத்தரணி என்ற வகையில் நான் அவருக்கு அறிவிப்பேன்.

இது தொடர்பில் என்னுடைய முழுமையான எதிர்ப்பினை வெளியிடவுள்ளேன். பயங்கரவாத தடுப்பு பிரிவு, ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினை மதிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. என தெரிவித்தார்.

Related posts: