பண்பாட்டுச் சீரழிவை தடுத்து நிறுத்தி  பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத்த யாழில் உதயமாகிறது பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம்!

Saturday, July 16th, 2016

யுத்தச்சூழலால் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பம் தற்போது தனது முழுமையான படையெடுப்பைத் தொடங்கி விட்டது. படிப்படியான அறிமுகமும் சரியான வழிகாட்டல்களும் போதியளவு இன்றிய காரணத்தால்  தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்மறையான பண்பாட்டுத் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது. நமது பண்பாட்டில் எற்பட்டுவரும் வீழ்ச்சி நமது இனத்தை அழிவுப்பாதை நோக்கியும் தள்ளுகிறது.

இதனால் பண்பாட்டுத் தளத்தில் ஒரு மக்கள் இயக்கமாகச் செயற்பட்டுப் புதிய பண்பாட்டைக் கட்டியெழுப்பி, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது சமூக அக்கறை கொண்டவர்கள் அனைவரதும் பணியாகிறது.

போருக்குப் பிந்திய இன்றைய காலகட்டத்தில் தற்போதய மற்றும் எதிர்காலத் தலைமுறையின் நன்மை கருதி ஆரோக்கியமாகச் சிந்தித்துச் செயலாற்றக்கூடிய ஒரு புதிய சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு பண்பாட்டுத்தளத்தில் செயற்படவேண்டியது அவசியமாக உணரப்படுகிறது. நமது அடையாளங்களைப் பேணிக் கொள்ளவும், தனித்துவமான தன்னம்பிக்கை உடைய ஒரு புதிய தலைமுறையை உருவாக்கவும் காலம் தாழ்த்தாது செயற்படவேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தில் நிலவும் பண்பாட்டுச் சீரழிவை தடுத்து நிறுத்தி பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத தவும் ஆளுமை மிக்கதமிழ் சமூகத்தை தோற்றுவிக்கவும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்  ஆரம்பிக் கப்படுகிறது  எனத் தெரிவித்தார் யாழ்.பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர்  கலாநிதி  க.சிதம்பரநாதன்.

“புதியதொரு சமூகத்தை உருவாக்கும் வேலைத் திட்டம்” எனும் தொனிப்பொருளின்கீழ் அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரால் உருவாக்கப்படவுள்ள  பண்பாட்டு மலர்ச்சிக்கூட திட்டத்த லைமையேற்றுள்ள அவர் மேற்படி திட்டத்தின் ஆரம்பம் மற்றும் எதிர்கால உபாயங்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை(15-07-2016) முற்பகல்-11 மணியளவில் யாழ்.கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அரங்கச் செயற்பாட்டு நிலையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பண்பாட்டு மலர்ச்சிக் கூடங்களை தமிழர் தாயகப் பிரதேசங்களின் பல்வேறு இடங்கள் தோறும், ஊர்கள் தோறும் நாம் கட்டி அமைக்க வேண்டும். இதன் அடிப்படையில் முதலாவது பண்பாட்டு மலர்ச்சிக்கூடத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும், நல்லூருக்கும், நகரத்திற்கும் அண்மிய  பகுதியில் நாம் அமைத்துள்ளோம்.  இதற்காக 4.5 பரப்புக்  காணியும் அக்காணியில் ஒரு பழைய பாரம்பரிய வீடும் உள்ள இடத்தை புலம் பெயர்ந்து வாழும் நமது உறவு ஒருவரிடம் இருந்து பொறுப்பெடுத்து, இக் காணிக்குள் ஓர் ஆற்றுகைவெளியும் அமைத்து, வீட்டிலும் காணியிலும் தேவையான அமைப்பு மாற்றங்களைச் செய்து முதலாவது பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினை உருவாக்கியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக தமிழர் தாயகப் பிரதேசங்களின் பல்வேறு இடங்களிலும் இப் பண்பாட்டு மலர்ச்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.

இப் பண்பாட்டு மலர்ச்சி வேலைத்திட்டம் முழு மக்களுக்கும் உரியது. மாணவர்களும் இளையோர்களும் பெண்களும் யுத்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களும் முன்னுரிமை பெறுவார்கள். பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் தொடக்க விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை- 9.30 மணிக்கு இல-07, பழம் வீதி, கந்தர்மடம் எனும் முகவரியில் இடம்பெறவுள்ளது என்றார்.

Related posts: