பகடிவதை தொடர்பில்கைதான 15 பேருக்கும் மறியல் நீடிப்பு!

Wednesday, April 12th, 2017

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகடி வதை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் 15 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், கண்டி பிரதான நீதவான் கிஹான் இந்திக அத்தநாயக்க முன்னிலையில், நேற்று (11) ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

பேராதனைப் பல்கலைக்கழக, விவசாயபீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் எட்டுப்பேரை, பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் அழைத்துச்சென்று, நிர்வாணமாக்கி, மனிதாபிமானமற்ற முறையில், பகடி வதைக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அதே பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவர்கள் 15பேர், கடந்த 20 ஆம் திகதி முதல், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.   மாணவர்களுக்கு பிணை வழங்குமாறு, அவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், நீதிமன்றத்தில் நேற்று (11) கோரியிருந்த போதிலும், பிணைக் கோரிக்கையை நீதவான் நிராகரித்துவிட்டார்.

பேராதனை, களுகமுவ மேகொட பகுதியில் உள்ள, வீடொன்றில் வைத்தே, மார்ச் மாதம் 19ஆம் திகதி இரவு 11:30 மணிக்கு, இந்த எட்டுப்பேரும் மனிதாபிமானமற்ற முறையில் பகடி வதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.   மிகவும் வித்தியாசமான சத்தங்களும் முனகல்களும் கேட்பதையிட்டு சந்தேகம் கொண்ட அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அவைதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்தே, அந்த மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

Related posts:

வயதான பொதுமக்கள் தொடர்பில் இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது - ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!
கைத்தொழில் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் – மத்...