நோய்களைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்தவேண்டும் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Wednesday, June 6th, 2018

வெள்ளநீர் வழிந்தோடியிருப்பதைத் தொடர்ந்து பரவக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு துரிதமாக பரவக்கூடிய நோய்களில் எலிக்காய்ச்சல் நோய் முக்கியமானதாகும். ஓர் இடத்தில் நீர் தேங்கி நிற்கும்போது அல்லது அசுத்தமான நீர் உள்ள இடங்களில் மிகவும் அவதானமாக இருப்பதன் மூலம் எலிக்காய்ச்சலை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் திருமதி பபா பலிகவடன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இடங்களில் வேலை செய்யும்பொழுது எலிக்காய்ச்சல் தவிர்ப்பிற்கான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுமாறு டொக்டர் பலிகவடன மக்களைக் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

வயல் நிலங்களில் வேலை செய்வதற்கு முன்னரும் இந்தச் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக தரிசு வயல் நிலங்களில் இறங்கும்போது இந்த நோய் ஏற்படக்கூடிய ஆபத்து கூடுதலாகக் காணப்படுகின்றது.

பாதங்களில் அல்லது நகங்களில் காயம் இருந்தால் இவ்வாறான நீர் தேங்கி நிற்கும் இடங்களில் இறங்குவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிடம் இருந்து எலிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண்களில் வெள்ளை படர்தல், உடலின் நிறம் வெளிறுதல், உடல் சிவந்து போதல் என்பன எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

இவ்வாறான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அரச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுமாறு விசேட வைத்தியர் திருமதி பபா பலிகவடன பொது மக்களைக் கேட்டுள்ளார்.

Related posts: