அனர்த்தம் தொடர்பில் 5 நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் –  ஜனாதிபதி பணிப்பு!

Monday, April 17th, 2017

மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்தமையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் உடைமைகள் சேதம் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்த அனர்த்தம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இடர் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்குமாறும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி நெருக்கடி ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்ந்தும் அபாயம் நிலவும் இடங்களில் வாழ்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள நெற் சந்தைப்படுத்தல் சபையின் மூன்று களஞ்சியசாலைகளில் தற்காலிகமாக தங்கவைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கு தேவைப்படும் சகல அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை கலந்துரையாடலை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை (18) காலை 8.30 இற்கு மீண்டும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts: