நியமனத்துக்காக போராடும் நிலைக்குத்தள்ள வேண்டாம் – வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் வேண்டுகோள்!

Friday, November 11th, 2016

இந்த ஆண்டு இறுதிக்குள் எமக்கான நியமனங்களைப் பெற்றுத் தாருங்கள்.நிரந்தர நியமனத்துக்காக இனியும் போராட்டங்கள் நடத்தும் நிலைக்கு தொண்டராசிரியர்களைத்  தள்ளவேண்டாம் என வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் இ.ஜெயராசா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் உள்ளதாவது:

வடக்கு மாகணப் பாடசாலைகளில் போர்ச் சூழல் காலங்களிலும், நலன்புரி நிலையங்களிலும், மீள்குடியமர்ந்த போதும் தற்போதும் பல வருடங்களாக எதுவித கொடுப்பனவுகளும் இன்றித் தொடர் ஆசிரியர்களாகச் சேவையாற்றுகின்றோம். 2011, 2013 ஆம் ஆண்டுகளில் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றும் நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை.

எமது நியமனம் தொடர்பாக கோரிக்கைகளையும், பெயர் விபரங்களையும் சம்பந்தப்பட்ட சகலரிடமும் கையளித்துள்ளோம். கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தபோது இந்த வருட 1ஆம் தவணை விடுமுறையில் மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. எமது பெயர்கள் நியமனத்துக்காக கல்வி வலயங்கள் தோறும் காட்சிப்படுத்தப்பட்டன.

எனினும் எமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை. கடந்த ஓகஸ்ட் மாதம் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக எமது கோரிக்கையை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடத்தினோம். இந்த வருட முடிவுக்குள் எமக்கான நியமனங்கள் வழங்கப்படும் என்று – ஆளுநர் உறுதி அளித்தார்.

பின்னர் எமக்கான நியமனத்தை உள்ளீர்ப்பு பரீட்சை நேர்முகத் தேர்வு என்பவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படாததால் கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சின செயலகத்துக்கு முன்பாக உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தோம்.

மத்திய கல்வி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் எமது கோரிக்கைகளை ஏற்று ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு நிலையறி பரீட்சை ஒன்றை நடத்தி, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த வருட இறுதிக்குள் நிரந்தர நியமனமாக்குவோம் என உறுதியளித்தார்.

இன்றுவரை தொண்டராசிரியர்களுக்கான நியமனத்தை வழங்குவதற்குரிய சரியான நாளைத் தெரிவிக்கவில்லை. அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் நடந்ததாகவும் நாம் அறியவில்லை. நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொடர் சேவையில் இருக்கும் எமக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகள் காலம் தாழ்த்தாது எமது சேவையையும் – நிலையையும் கருத்தில் கொண்டு இந்த வருட முடிவுக்குள் எமக்குரிய நியமனத்தைப் பெற்றுத்தாருங்கள். தொண்டராசிரியர் பணியை முன்னெடுக்கும் எம்மை எமது நியமனத்துக்காக இனியும் போராட்டங்களை நடத்தும் நிலைக்குத் தள்ள வேண்டாம் – என்றுள்ளது.

article_1430565750-ccc

Related posts: