நவீன வசதிகளுடன் கூடிய என்.எஸ்.பி.எம். பசுமைப் பல்கலைக்கழகம் திறப்பு!

Wednesday, October 26th, 2016

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோமாகம பிட்டிபண NSBM (National School Of Business Management)  பசுமை பல்கலைக்கழகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மஹிந்த சமரசிங்க உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். 30 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய வகையில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இது 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

முகாமைத்துவம், கணினி, பொறியியல் உட்பட மூன்று பீடங்களின் கற்கை நெறிகள் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட இருப்பதாக உபவேந்தர் கலாநிதி இ.ஏ.வீரசிங்க தெரிவித்தார்.சர்வதேச பாடத்திட்டங்களுக்கு அமைய, உயர் மட்டத்திலான பாடநெறிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களும், பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம். கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அடிப்படை பாடநெறியின் மூலம் பட்டப்படிப்பில் இணைந்து கொள்ள முடியும் என்று உபவேந்தர் கூறினார்.

தெற்காசியாவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பசுமை பல்கலைக்கழகம் இதுவாகும். 2012ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு ஆயிரம் கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. நவீன கேட்போர் கூடம், கணனி ஆய்வுக்கூடம், உடற்பயிற்சி நிலையம், நீச்சல் தடாகம், மாணவர் கேந்திர நிலையம், நாடக அரங்கம் உட்பட சகல நவீன வசதிகளையும் கொண்டதாக இந்த பசுமைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

பல்கலைக்கழக நகரம் என்ற எண்ணக்கருவின் கீழ் இது அமைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்கான வீடமைப்புத் திட்டம், வங்கிக் கட்டடத் தொகுதி என்பனவும் இதில் அமைந்துள்ளன. புத்தகங்கள், டிஜிட்டல் வசதிகள் என்பனவற்றை உள்ளடக்கிய நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி நூலகமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது

685facdc39eb4c6cae6c647995a85b2d_L

Related posts: