நல்லிணக்கப் பயணமாக மாத்தறையிலிருந்து வருகை தந்த குழுவினர் யாழில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு!

Saturday, November 12th, 2016

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவிற்கமைய தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் கைகோர்ப்பு எனும் நல்லிணக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஒருகட்டமாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் உதவிச் செயலாளரான அனுர தலைமையில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பது வரையான அரச அலுவலர்கள் இன்று சனிக்கிழமை(12) யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குழுவினருக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. குறித்த குழுவினர்  இன்று மாலை  நல்லை ஆதீன குருமுதல்வர் வாசஸ்தலத்தில் யாழ். மாவட்டச் சர்வமதத் தலைவர்களைச்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,  யாழ். ஸ்ரீ நாக விகாராதிபதி, சைவக் குருக்கள் சபையின் தலைவர் கிருபானந்தக் குருக்கள், யாழ். சர்வமதக் குழுவினர் அருட்தந்தை .ஐ.டி. டிக்சன், அருட்தந்தை ஜெயசீலன், உலமா சபைத் தலைவர் அசீஸ் மௌலவி,  பெரிய பள்ளிவாசல் மௌலவி றலீம் ,மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் பங்கேற்றுத் தமது கருத்துக்களை வழங்கினர்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமெனில் வடக்குக் ,கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.  நாட்டின் இனங்களுக்கிடையில் சகவாழ்வு, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைத்துத் தரப்பினருக்கும் காணப்படுகின்றது.

தற்போதைய நல்லாட்சியில் மூன்று விடயங்கள் இன்னும் கேள்விக்குறியாகவேயிருந்து வருகின்றன. குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, மக்கள் தங்கள் சொந்தவிடங்களில் மீள்குடியேற்றம்  போன்றன காணப்படுகின்றன.இவ்வாறான சூழலில் தேசிய நல்லிணக்கம் எவ்வாறு சாத்தியப்படும்? என மாத்தறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் உதவிச் செயலாளரான அனுர தலைமையிலான குழுவினரிடம் யாழ். மாவட்டச் சர்வமத குழுவினர் இதன் போது சுட்டிக்காட்டினர் .

unnamed

Related posts: