தமது இயலாமையை மூடிமறைக்க எமது கட்சி மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் – வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா

Tuesday, May 10th, 2016

கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழர்களின் உரிமை மற்றும் வாழ்வியல் தேவைகளுக்காக சரியான வழிகளில் பயன்படுத்தி வருவது மட்டுமல்லாமல் எமது இனத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடைமுறைச்சாத்தியமான வழிமுறைகளை தேடி அதனூடாக பலவற்றை சாதித்துக்காட்டி வருபவர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரைதவராசா தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டில் தலைமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பது ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு இன்று மூன்றாவது தசாப்தங்களை தொட்டுள்ளது. இதனூடாக நாங்கள் ஜனநாயக அரசியலில் காலடி எடுத்துவைத்து 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இந்த 30 வருடகால அரசியல் பாதையில் எமது கட்சி கடந்துவந்த பாதைகள் மிக கரடு முரடானவை. அவற்றைக் கொஞ்சம் நாங்கள் பின்னோக்கிப் பார்ப்பது இன்றைய நாளில் சாலப்பொருத்தமானதாக இருக்கும்.

இனத்தின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தில் மாணவப் பருவத்திலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஜனநாயகப் பாதையில் காலடி எடுத்து வைத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்ற கட்சியை உருவாக்கி கட்சிக்கு தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரம் பெற்றதைத்தொடர்ந்து இந்தியாவிலிருந்து கட்டம் கட்டமாக இலங்கைக்குத் திரும்பிவந்து எமது செயற்பாடுகளைத் தொடங்கினோம்.

நாம் யாழ்ப்பாணம் வந்தபோது எமது மக்கள் யுத்தக் கெடுபிடிகளுக்குள் சிக்குண்டு உண்பதற்கு உணவோ, ஏனைய அடிப்படைத் தேவைகளோ இல்லாது வாழ்ந்து கொண்டிருந்தனர்.

மக்களது உணர்வுகளை கண்டுகொண்ட நாம் யாழ். குடாநாட்டு மக்கள் குறிப்பாக தீவக மக்களின் துயர்துடைக்க எமது கட்சித் தோழர்கள் களமிறங்கினர். நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சியின் வேலைகள் 1995ஆம் ஆண்டு யாழ். குடாநாடு இராணுவத்தினர் வசம் வந்த பின்னர் அந்தப் பிரதேச மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக எமது கட்சி தமது செயற்திட்டங்களைப் படிப்படியாகவே விஸ்தரித்துக்கொண்டு போனது.

நாம் செய்த மக்கள் பணிக்கு எமக்குக் கிடைத்த முதலாவது அங்கீகாரம் எமது மக்களினால் நாடாளுமன்றத்திற்கு எமது கட்சியிலிருந்து ஒன்பது உறுப்பினர்கள் அன்று தெரிவு செய்யப்பட்டோம். அதனைத்தொடர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இந்தப் பிரதேசத்தில் ஜனநாயகக் கட்டமைப்பு வலுவடைய வேண்டுமென்று அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு நாம் கொடுத்த அழுத்தத்தின் விளைவு உள்ள+ராட்சித் தேர்தல்கள் நடாத்தப்பட்டு, அந்த உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையானவற்றை எமது கட்சி தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது மக்களுக்கான பணிகளை செய்துகொண்டிருக்கின்றது.

இவ்வாறாக எமது அரசியல் செயற்பாடுகளின் மூலம் எமது மக்களின் ஆதரவுடன் படிப்படியாக நாங்கள் எமது கட்சியின் செயற்பாட்டை வலுப்படுத்தி வந்திருக்கின்றோம்.

இவற்றுக்கு மேலாக எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்ற, மீள்நிர்மாண அமைச்சராக இருந்த காலத்தில் அன்றைய யுத்த சூழலினால் பாதிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட இந்த யாழ். மாவட்டத்தில் உள்ள கோவில்கள், பாடசாலைகள், வீதிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளக கட்டுமானங்களையும் செய்து மீண்டும் யாழ்ப்பாணத்தை புதுப்பொலிவாக்கினார்.

எமது செயற்பாடுகள் இத்துடன் நின்றுவிடவில்லை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பாக அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸவினால் அமைக்கப்பட்ட மங்களமுனசிங்க கொமிசன் அதனைத் தொடர்ந்து சந்திரிக்கா அம்மையாரால் அமைக்கப்பட்ட பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசியலமைப்புக் குழு, ஆகஸ்ட் 2000 அரசியல் தீர்வுக்கான முன்மொழிவு அதனைத் தொடர்ந்து சர்வகட்சி மாநாடு இவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காகக் கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை அன்றிலிருந்து இன்றுவரை எமக்குக் கிடைத்த அத்தனை சந்தர்ப்பத்திலும் வலுவாக உறுதியாக நெறிப்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றோம்.

அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் முன்பும்கூட எமது கட்சியால் பிரஸ்தாபிக்கப்பட்ட அரசியல் மாற்றத்திற்கான முன்மொழிவுகள் எமது பிரேரணையில் தெட்டத்தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது கட்சி கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழர்களின் உரிமைக்காக அன்றிலிருந்து இன்றுவரை குரல் கொடுத்தது மட்டுமல்ல. உரிமைகள் கிடைப்பதற்கான வழிமுறைகளில் நடைமுறைச்சாத்தியமான வழிமுறைகளை அணுகி செயற்பட்டு வருகின்றது. சந்திரிக்கா அம்மையாரின் ஆகஸ்ட் 2000 அரசியல் முன்மொழிவுகள் இன்று பலராலும் பல கட்சிகளாலும் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளையும் விட சிறந்ததொரு முன்மொழிவு. ஆனால், அந்த முன்மொழிவை எமது தமிழ் தலைமைகள் புறக்கணித்ததின் விளைவே இன்று நாங்கள் இந்த சூழலில் இருக்கின்றோம். இதனால் நாம்; எமக்கு அரசியல் தீர்வு இல்லை என முதலைக்கண்ணீர் வடிக்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றோம்.

அரசியல் தீர்வு மட்டுமல்லாமல், இந்த வடமாகாண சபை ஏற்படுத்தப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த இரண்டரை வருடங்களும்; எமக்கு கிடைத்திருந்தால், நாம் எவ்வளவோ சாதனைகளைப் புரிந்து எங்களால் என்ன செய்ய முடியுமென இந்த வடமாகாண மக்களுக்கு நிரூபித்துக்காட்டியிருப்போம்.

தங்களுடைய இயலாமையை மூடிமறைப்பதற்காக எமது கட்சி மீது பாரிய குற்றச்சாட்டுக்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும்கூட சுமத்தி வருகின்றார்கள். பொய்களை மீண்டும் மீண்டும் எடுத்துக்கூறி அவதூறுகளைக் கூறிவருகின்றார்கள். இதுவரை எம்மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டுக்கூட நிரூபிக்கப்படுவதற்கான ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை எந்த இடத்திலும் சமர்ப்பிக்கவில்லை.

எம்மை நோக்கி வரும் பிரச்சினைகளை வித்தியாசமான முறையில் அணுகுவதின் விளைவாக நாங்கள் என்றும் நிலைத்து நின்று கொண்டிருக்கின்றோம். மூங்கில் எந்தப் புயலுக்கும் வளைந்து குனிந்துவிட்டு மீண்டும் நிலையாக நிற்பதைப்போல் எமது கட்சியும் நிலையாக நிற்கும் என்பதை உறுதியாகக் கூறிக்கொண்டு, இதுவரை எமது செயற்பாடுகளில் தவறுகள், பிழைகள் ஏதும் இருப்பின் அதனைச் சீர்செய்து முன்னெடுப்பதற்கு எமது கட்சி ரீதியான கட்டமைப்பு மாற்றம் செய்யப்படுவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.

இன்று ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் சர்வதேச ரீதியில் அரசியல் செயற்பாடுகளின் அடிப்படைக் கோட்பாடுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாறுபட்ட சூழலில் எமது கட்சியும் அந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் எம்மை நாங்கள் மாற்றிக்கொண்டு மக்களுக்குச் சேவையாற்றத் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தேசிய எழுச்சி மாநாடு கட்சி ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் கட்சியின் செயற்பாட்டு ரீதியாகவும் மாற்றங்களைக் கொண்டு வந்து பீனிக்ஸ் பறவைகளைப் போல மீண்டெழுந்து இந்த மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக மாற்றுவோம் என தெரிவித்தார்.

 

Related posts: