தனி அங்கீகாரம் வேண்டும்!

Sunday, October 16th, 2016

இலங்கை அரசியல் சாசனத்தில் இந்திய வம்சாவளியினருக்கு மலையக தமிழர்கள் என்ற இன ரீதியான தனித்துவ அங்கீகாரம் தேவை என மலையக தமிழ் சிவில் அமைப்புகளினால் ஐ.நா. மனித உரிமை ஆணைய சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பிரதிநிதியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. .

தற்போது இலங்கையில் தங்கியுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடினுடன் இடம் பெற்ற சந்திப்பின் போது மலையக தமிழ் சிவில் சமூகத்தினால் இந்த விடயம் அவரது கவனத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக பிபிசியுடன் பேசிய ஜனநாயகத்திற்கான மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டாளரான சந்திரன் விஜயசந்திரன், “இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர் மற்றும் முஸ்லிம் என நான்கு தேசிய இனங்கள் என்ற அடிப்படையில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் அதிகார பகிர்வும் இடம் பெற வேண்டும்´´ என்கின்றார்.

இந்த விவகாரத்தில் ஐ. நா மனித உரிமைகள் ஆணையரும், ஐ.நாவும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இந்த சந்திப்பில் தங்களால் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார். தற்போது மலையக மக்கள் தேசிய இனம் என்று கூறப்பட்டாலும் சட்ட ரீதியான அந்தஸ்து மற்றும் அரச நடைமுறைகளில் அது ஏற்றுக் கொள்ளப்படுவதாக இல்லை என்றும் அவர் கூறுகின்றார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ´´அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனங்களில் கூட சிங்களவர், இலங்கை தமிழர், முஸ்லிம் என இன ரீதியாக நியமனங்கள் இடம் பெறுகின்றன. தமிழர் பிரதிநிதிகளாக நியமனம் பெறுவோர் வடக்கு – கிழக்கு தமிழர்களை பற்றி தான் அங்கு பேசுவார்களே தவிர மலையக தமிழர்களை பற்றி பேச மாட்டார்கள் . அரசாங்கமும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரச்சினைகளை கையாண்டு பிரதிநிதிகளை நியமனம் செய்கின்றது மலையக தமிழர்களை புறக்கணிப்பதாகவே நடந்து கொள்கின்றது ” என்றார்.

இந்த விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தாலும், ஐ.நா வின் கவனத்திற்கும் இதனை முன்வைக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் சந்திரன் விஜயசந்திரன் குறிப்பிடுகின்றார்  கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த ஐ. நா வின் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான ரீட்டா இஷாக் நாடின், தமிழ், முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை தனித் தனியாக சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரையும் அவரது அலுவலகத்திற்கு சென்று சந்திந்திருக்கின்றார். இந்த சந்திப்பில் அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பலப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கூறுகின்றார்.

பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு நிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம், மீள் குடியேற்றத்திற்கு தடையாகவுள்ள காரணங்கள், அரசியல் சாசனத்தில் 13 வது திருத்தத்தை அதாவது மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் சமாந்தரமாக ஒரு நிரந்தர தீர்வை அடைய வேண்டும் என்ற கருத்தை தான் வலியுறுத்தியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் குறிப்பிடுகின்றார்.

estaate

Related posts: