கடற்படை சிறப்பு நடவடிக்கை – இலங்கை கடற்பரப்பில் 237 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Monday, June 14th, 2021

பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த போதைப்பொருளை படகில் கடத்தரிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை  கடற்பரப்பில் இன்று அதிகாலை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, ​​கரையை நோக்கி சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பது கண்டறியப்பட்டது.

இதை ஶ்ரீசோதனையிட்டபோது கேரள கஞ்சா கொண்ட இரண்டு பொதிகள் படகில் காணப்பட்டன. அதனால் அதில் பயணித்த மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேக நபர்களால் கடலில் வீசப்பட்ட கேரள கஞ்சாவின் மேலும் ஆறு பொதிகள் இருப்பது தெரியவந்தது. மொத்தமாக 8 பொதிகளில் அடைக்கப்பட்டுள்ள 237 கிலோ 500 கிராம் ஈரமான கேரள கஞ்சா கடற்படையினர்  இதன்போது கைப்பற்றியிருந்தனர்.

சர்வதேச கடல் எல்லையில் உள்ள கேரள கஞ்சாவை டிங்கிக்கு கொண்டு வர கடத்தல்காரர்கள் முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அதேநேரம் குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி 71 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில் இருவர் 27 வயதுடையவர்கள். அவர்கள் இருவரும் பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றையவர் அச்சுவேலி வளலாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுவதுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: