ஜெயலலிதாவின் வெற்றி  இலங்கைக்கு ஆபத்து! – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Monday, May 23rd, 2016

ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுத்து தனித் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கும் “இந்தியாவின்” தலையீடு இலங்கைக்குள் அதிகரிக்கும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்தபண்டார மேலும் கருத்து தெரிவித்துள்ளதாவது –

தமிழ்நாட்டில் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார். தமிழ்நாட்டில் ஏனைய கட்சிகள் பலமிழந்து ஜெயலலிதாவின் பலம் ஓங்கியுள்ளது. இது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும்.

ஏனென்றால் ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை வெற்றி பெற்றால் இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுப்பேன்.கச்சதீவை மீட்பேன் என்றெல்லாம் உறுதிமொழி வழங்கினார்.

இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் எடுப்பார். இதன்போது இந்தியப் பிரதமர் மோடி இதனை எதிர்க்கமாட்டார். தனித்து அதிகப் பெரும்பான்மை பெற்ற தமிழ்நாட்டு முதலமைச்சரை பகைத்துக் கொள்வதை மோடி விரும்பமாட்டார்.

எனவே இந்தியாவின் மத்திய அரசின் ஆதரவுடன் ஜெயலலிதா இலங்கையில் வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களை முன்னகர்த்துவார். சுயநிர்ணய உரிமை கிடைத்த பின்பு தனித் தமிழீழம் என்பது தானாகவே உருவெடுக்கும். அதனை தடுக்க முடியாது. அதேபோன்று சட்டரீதியாக இலங்கைக்கு சொந்தமான கச்சதீவும் பறிபோகும் ஆபத்தும் உள்ளது.

கடந்த காலங்களை விட இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் அதிகரிக்கும். எனவே ஜெயலலிதா முதலமைச்சரானது இலங்கைக்கு ஆபத்தானதாகவே அமையும் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளளார்.

Related posts: