“சைடம்” பிரச்சினைக்கு தீர்வுகாண மூன்று வழிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிப்பு!

Thursday, November 24th, 2016

சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டுவரும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உயர்கல்வி தொடர்பான உப குழுவின் அறிக்கையை அதன் தலைவர் வடிவேல் சுரேஷ் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையிலேயே, மாணவர்களின் சிகிச்சை பயிற்சிக்கான சந்தர்ப்பங்களை அதிகரித்தல், கண்காணிப்பு நிறுவனமொன்றினால் சைடம் மருத்துவ பட்டத்தின் தரத்தைப் பேணல், நீண்டகாலத் திட்டமாக இலங்கை தனியார் மருத்துவக் கல்வியின் எதிர்கால மேம்பாட்டை மேற்கொள்ளல் ஆகிய சிபாரிசுகள் முன்மொழியப்பட்டுள்ளன.

“நெவில் பர்னாந்து வைத்தியசாலையை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அரச வைத்தியசாலையாக அது செயற்படவேண்டும்.

மேற்படி வைத்தியசாலையிலுள்ள 1000 கட்டில்களில் 100 கட்டில்கள் தனியார் துறை என்ற வகையில் செயற்படவேண்டும்.

அவிசாவலை, முல்லேரியா, மற்றும் ஹொரண வைத்தியசாலைகளை மேலதிக போதனா வைத்திய சாலைகளாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

சைடம் மாணவர்களுக்கு சிகிச்சை பயிற்சிகளை வழங்குவதற்கான கட்டணமொன்றை நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் கலந்தாலோசித்த பின்னர் சுகாதார,போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் சைடம் ஊடாகத் தீர்மானிக்க வேண்டும்.

கடுவெல உட்பட்ட இன்னுமொரு பிரதேசத்தையும் மருத்துவ விஞ்ஞானம் கற்பிப்பவர்களுக்கான சுகாதார மருத்துவ பிரதேசமாக ஒதுக்கப்பட வேண்டும். தடவியல் மருத்துவ அலுவல்களில் ஈடுபடுவதற்காக இந்த வைத்தியசாலை தொடர்பில் நீதிமன்ற வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

சைடம் மருத்துவ பட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் தரத்தை பாதுகாப்பது முக்கியமானது. அந்தவகையில் சைடம் மருத்துவ கல்லூரிக்கு திடமான தேர்ந்தெடுத்தல் முறைமையொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படவேண்டும்.

உயர்தரத்தில் சித்தி பெற்றிருந்தல் வேண்டும். அல்லது லண்டன் உயர்தரத்தில் சித்தி பெற்றிருத்தல் அவசியம். சைடம் தொடர்பிலான கண்காணிப்பு நிறுவனமொன்று நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட வேண்டும். அத்துடன், சைடம் மாணவர்களின் மருத்துவப் பட்டப்படிப்பின் இறுதிப் பரீட்சையானது அரச மருத்துவ பீடங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் குறித்துரைக்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் தரத்துக்கமைய நடாத்தப்பட வேண்டும்” என்றும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக சுகாதார அமைப்பின் சிபாரிசுகளுக்கமைய நாட்டில் 40 ஆயிரம் வைத்தியர்கள் இருக்கவேண்டியபோதிலும் 25 ஆயிரம் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவிவருகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஆ .சுமாரசிங்க விளக்கமளிfக்கையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, “அறிக்கை சமர்ப்பித்த உப குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவரின் மனைவி சைடத்தில் கல்வி கற்றுள்ளார் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். அத்துடன், இந்த அறிக்கை தொடர்பில் பிரிதொரு நாளில் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றார்.

தினேஷ் குணவர்தனவும் இதே தர்க்கத்தை முன்வைத்தார். ஆனால், உடனடி விவாதத்துக்கு அரச தரப்பு மறுத்துவிட்டது. பின்னர் விவாதம் ஆரம்பமானது.இந்நிலையில், பிமல் ரத்நாயக்க எம்.பி. உரையாற்றும்போது மீண்டும் சர்ச்சை வெடித்தது. அவர் தமதுரையில்,

“சைடம் சட்டவிரோதமானது. அரசியல் பலத்தைக்கொண்டே அது அமைக்கப்பட்டது. எனவே, ஏனைய பல்கலைக்கழகங்களுடன் அதை ஒப்பிடவேண்டாம். கொலைசெய்யப்பட்ட ரகர்வீரர் தாஜுதீனின் உடற்பாகங்கள்கூட சைட்டத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது” – என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான ரஞ்சித் டி சொய்சா, “உறுப்பினர் கூறும் குற்றச்சாட்டு இன்னும்  நிரூபிக்கப்படவில்லை. சந்தேகம்தான் எழுந்துள்ளது. இது நீதிமன்ற விவகாரம். ஆகவே, அவர் கூறியதை ஹென்சாட்டில் இருந்து நீக்கவேண்டும்” என்றார்.

அதன்பின்னர் கருத்து வெளியிட்ட சபை முதல்வாரன லக்ஷ்மன் கிரியெல்ல,மேற்படி குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அது தொடர்பாகக் கூற முடியாது” தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts: