சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு அறிக்கையளிக்காது இழுத்தடிப்பு – மன்று விசனம் தீர்க்கமான கட்டளை வருகிறது!

Thursday, January 12th, 2017

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பில் சரியான தெளிவான அறிக்கையொன்றை அதிகரிகளோ, சம்பந்தப்பட்ட துறையினரோ மன்றுக்கு இதுவரை வழங்கவில்லை என மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் தெரிவித்துள்ளார்.

இதனால் இப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் அடுத்த வழக்குத் தவணையில் தீர்க்கமான கட்டளை ஒன்று பிறப்பிக்கப்படும் என்றும் நீதிவான் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸாரால் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சோ.தேவராஜா, ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்ன சிங்கம், ஜேசுநேசன், பார்த்தீபன், சோபிதன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

கடந்த வழக்கு தவணையில் கொழும்பு சுற்றாடல் குடியிருப்பு சுகதார பணிப்பாளருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் நேற்றைய வழக்கு விசாரணையின் போதும் அவர் மன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. வலி.வடக்கு பிரதேசத்திற்கான குடிநீர் தற்போது நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.

வலி.வடக்கில் 125 தண்ணீர் தாங்கிகள் உள்ள போதும் அவற்றில் பிரதானமாக 32 தண்ணீர் தாங்கிகளுக்கு மாத்திரமே நீர் விநியோகிக்கப்படுகிறது என மன்றில் பிரசன்னமாகியிருந்த பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பாக 3 வருடங்கள் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்ற போதும் இன்றுவரை குறித்த பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்;ட பொறுப்பான அதிகாரிகளால் சரியான தெளிவான அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என் நீதிவான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டியுள்ளது என கூறிய நீதிவான் அக்கட்டளையை பிறப்பிப்பதற்காக இவ்வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஒத்திவைத்தார். இதேவேளை குறித்த நீர் பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்றில் மனிதவுரிமை மீறல் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கு பிரதம நீதியரசரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதம் எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது என அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.

water_oil_kinaru

Related posts: