சிறுப்பிட்டியிலிருந்து நவீன அரிசி ஆலை மருதங்கேணிக்கு மாற்றம்!

Saturday, October 27th, 2018

வலி கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவில் சிறுப்பிட்டியில் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நவீன அரிசி ஆலை பொதுமக்களின் ஆட்சேபனையை அடுத்து மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு அரிசி ஆலை அமைப்பதற்கு மீள் குடியேற்ற மற்றும் இந்து கலாசார அமைச்சு வழங்கியிருந்த 70 லட்சம் ரூபா நிதி உதவியுடனும் சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டுடனும் சேர்த்து பல மில்லியன் ரூபா செலவில் சிறுப்பிட்டியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான காணியில் நவீன அரிசி ஆலை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

அரிசி ஆலைக்கான அடிக்கல் நடப்பட்டதோடு சுற்றுச்சூழல் கனிய வளங்கள் திணைக்களத்தின் அனுமதி உட்பட ஏனைய அனுமதிகளும் பெறப்பட்டு பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த வேளையில் சிறுப்பிட்டியில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் அரிசி ஆலையை அமைப்பது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பானது என வலியுறுத்தி ஆட்சேபனை தெரிவித்தனர். பொதுமக்களின் ஆட்சேபனையை அடுத்து அரிசி ஆலையை சிறுப்பிட்டியில் அமைக்கும் திட்டம் நிறுத்தப்பட்டு அது வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி ஆலை அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ்.கேதீஸ்வரன் தகவல் தெரிவிக்கையில் நவீன அரிசி ஆலையை சிறுப்பிட்டியில் நவீன கருவிகளுடன் கூடியதாக பல மில்லியன் ரூபா செலவில் நிறுவுவதற்குச் சங்கம் ஏற்பாடு செய்து வந்தது.

பூர்வாங்க அனுமதிகள் மற்றும் ஏற்பாடுகளுக்கு மூன்று இலட்சம் ரூபா வரையில் செலவு செய்யப்பட்டிருந்தது. சிறுப்பிட்டி பொதுமக்கள் சிலர் ஆட்சேபணை தெரிவித்ததை அடுத்து அரிசி ஆலை நிறுவும் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதோடு அரிசி ஆலை அமைப்பது தொடர்பான வேலைத்திட்டம் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts: