சந்தேகநபரின் பிணையை இரத்துச்செய்து விளக்கமறியலுக்கு உத்தரவிட்டார்  நீதிபதி இளஞ்செழியன்!

Tuesday, November 29th, 2016

கொலை வழக்கொன்றின் சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று (28) உத்தரவிட்டுள்ளார்.

யாழ் நகரப் பகுதியில் வசித்து வந்த தேவராஜா என்ற குடும்பஸ்தர் தனது வீட்டில் அப் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை குடியேற்றியிருந்தார். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 27ம் திகதி கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட மோதலில் தேவராஜா கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை வழக்கில் ரவி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், மேலதிக விசாரணைக்காக யாழ் மேல் நீதிமன்றிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிபதி இளஞ்செழியனால் இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த 7ம், 8ம் மாதங்களில் நடைபெற்ற விசாரணைகளில் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அத்துடன் அவருக்கு பிணை வழங்கியவர்களும் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் யாழ் மேல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த 9 ஆம் மாதம் பிணை வழங்கியவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இன்று 28ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கமைய குறித்த சந்தேகநபர் கடந்த 4 மாத காலப்பகுதிக்கு மேலாக நீதிமன்ற அழைப்பாணையை மீறியமையை அரச தரப்பு சட்டத்தரணி இதன்போது, நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன், குறித்த நபர் மீது மல்லாகம் நீதிமன்றத்தில் மேலும் ஒரு கொலை வழக்கும் நபர் ஒருவரை தாக்கிக் கடும் காயம் விளைவித்தது தொடர்பான வழக்கும் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிபதி சந்தேகநபர் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதையும் நீதிமன்றத்தை அவமதித்ததையும் கருத்தில் கொண்டு, வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை, அவரைத் தொடர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் சந்தேகநபரின் பிணை மனுக்கள் நீதிமன்றத்தினால் நிரந்தரமாக ரத்துச் செய்யப்படுவதாகவும் நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார். மேலும், இவ் வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 4,5,6,9,11ம் திகதிகளில் தொடர் வழக்கு விசாரணையாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

18

Related posts:

கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களுக்கு சென்றடைய இரண்டரை வருடங்கள் செல்லும் - உலக சுகாதார நிறுவனத்தின் சிற...
வீதி அபிவிருத்தி குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராயப்படும் – அமைச...
கட்டணம் செலுத்தாதவிடின் குடிநீர் நிறுத்தப்படும் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்ச...