சட்டவிரோத ஆயுதங்களை களைய விசேட நடவடிக்கை – பொலிஸ் திணைக்களம்!

Saturday, March 4th, 2017

அண்மையில் களுத்துறை, கல்கிஸை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் போன்று எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்விசேட வேலைத்திட்டத்தை வடிவமைக்கும் செயற்பாட்டில் பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், சட்டம், ஒழுங்கு அமைச்சு, நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் அமைச்சு ஆகியன தற்போது கூட்டாக களமிறங்கியுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் நேற்று தெரிவித்தது.

இவ்வாறான சம்பவங்களுக்கு சட்டவிரோத ஆயுதங்களின் பாவனையே முக்கிய காரணமாக அமைந்துள்ளதனால் அவற்றைக் கைப்பற்றுவதற்காக நேற்று முதல் விசேட அதிரடி சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ​ரோஹன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி ஆகியோர் தெரிவித்தனர்.

தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இதனைக் கூறினர். இவ்விசேட வேலைத்திட்டத்தின் கீழ், முக்கிய சிறைக் கைதிகள் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றம் அழைத்துச் செல்லப்படும்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவி பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

அத்துடன் சிறைச்சாலைகளில் இருந்து வெளியேறும் சிறைக் கைதிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்பார்வை செய்தல், சிறைக் கைதியை நீதிமன்றம் அழைத்துச் செல்லும்போது ஏற்படக் கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் முன்கூட்டி​யே கவனத்துக்கு கொண்டு வருதல் ஆகிய விடயங்களை பொலிஸ் திணைக்களம் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் அதேநேரம் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் தகவல் தெரிவோர் அதனை 011-2854880 அல்லது 011-2854885 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தருமாறும் உண்மையை தெரியப்படுத்தினால் அவர்களுக்காக சிறந்த வெகுமதிகள் வழங்கப்படுவதுடன் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இச்செய்தியாளர் மாநாட்டில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்ததாதவது. நாட்டில் 2006ம் ஆண்டு 02ஆயிரமாக இருந்த கொலைகளின் எண்ணிக்கை 2016ம் அண்டில் 394 ஆக குறைவடைந்துள்ளது.

இது கடந்த 10 வருடங்களுக்குள் கொலைகளின் எண்ணிக்கையில் இடம்பெற்ற 80 சதவீத வீழ்ச்சியாகும்.

என்றபோதும் நாட்டில் அவ்வப்போது இடம்பெறும் குற்றச் சம்பவங்களுக்கு எமக்குள்ள பொறுப்பில் இருந்து நாம் சிறிதும் விலக மாட்டோம்.

அத்துடன் ஏனைய திணைக்களங்கள் மீது குற்றம் சுமத்த நாம் தயாரில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான தவறு இடம்பெறாத வகையில் செயற்படுவதே எமது இலக்கு.

எமது நாட்டில் நீண்டகாலமாக யுத்தம் இருந்ததனால் சட்டவிரோத ஆயுதங்கள் தவிர்க்க முடியாத பிரச்சினையாகும். எனவே அதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாம் சுற்றிவளைப்புக்களை தீவிரப்படுத்தவுள்ளோம்.

சட்டவிரோதமாக எவரும் ஆயுதங்களை தம்வசம் வைத்திருக்க முடியாது. அக்குற்றச் செயலுக்கு பிணை வழங்கப்படாததுடன் ஆகக்கூடியது 20 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.

அத்துடன் இரண்டு தடவைகளுக்கு மேல் குற்றம் இழைத்தோர் சுமார் 47 ஆயிரம் பேர் உள்ளனர். ஒரு தடவை குற்றம் இழைத்தோர் மற்றும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படாத இன்னும் ஒரு சாராரும் உள்ளனர். இவர்களிடையே குரோத உணர்வு இருப்பதன் காரணமாகவே கொலை முயற்சிகள் இடம்பெறுகின்றன.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்ததாவது. களுத்துறை சிறைச்சாலையின் பிரதான அதிகாரி கடந்த 27ம் திகதி நீதிமன்றம் அழைத்துச் செல்லவுள்ள சிறைக்கைதிக்காக விசேட பொலிஸ் பாதுகாப்புக் கோரி கடந்த 25ம் திகதி களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

எனினும் அன்றைய தினம் பொலிஸார் வேறு பணியில் கடமைக்கு அமர்த்தப்படுவதனால் பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாதென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதிலளித்துள்ளார்.

எனினும் 11 சிறைச்சாலை அதிகாரிகள் 07 துப்பாக்கிகளுடனும் இரண்டு சிறைச்சாலை பஸ்களின் உதவியுடனும் சிறைக்கைதியை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று கல்கிஸை சம்பவத்திலும் பிரதான சந்தேக நபர் பணம் வழங்கி நீதிமன்றம் அழைத்து வந்த குற்றச்சாட்டின் பேரிலேயே 16 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நிரபராதிகளாயின் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் தெரிவித்தார்.

sri-lanka-police-headquarters-colombo-port

Related posts: