சட்டத்தை மதிக்கும் நாடாக செயற்பட வேண்டும் – அமைச்சர் மங்கள சமரவீர!
Sunday, November 27th, 2016
நாட்டை அபிவிருத்தியை நோக்கி கட்டி எழுப்பும் பயணத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் மிகுந்த பொறுப்பு இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்குதற்கான நிகழ்வில் கலந்து கொண்டஉரையாற்றுகையிவேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இந்த நிகழ்வு கொழும்பு ஞாபகர்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அமைச்சர் மங்கள சமரவீர இங்கு மேலும் உரையாற்றுகையில்:
வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய யுகமாகும். இதேபோன்று அனைவருக்கும் இது முக்கியமான காலகட்டம் என்பதினால், சிறந்த எதிர்காலத்திற்கு இது சரியான சந்தர்ப்பம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதனை கருத்தில் கொண்டு எதிர்கால அபிவிருத்திக்காக அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்து முன்னோக்கி பயணிக்கும் நாம் நிலையான அபிவிருத்திக்கும் சமூகப் பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய ஜனநாயக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இதற்கான நிறுவனங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். சட்டத்தை பின்பற்றும் மற்றும் அதனை மதிக்கும் நாடாக நாம் செயற்பட வேண்டும், அனைவரது உரிமைகளையும் உறுதி செய்து மதிப்பு மிக்க நாடு ஒன்றை உருவாக்குவதற்கான வழிமுறையில் முன்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.
உலக நாடுகளுக்கு இலங்கை பிரச்சினைகள் அற்ற நாடு என்பதை எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். நாட்டின் பிரஜை என்ற ரீதியில் அனைவரும் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். இதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது. பிரச்சினைகளை நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் மதிப்பீடு செய்து, தேசிய மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவது முக்கியமானதாகும். கடும் போக்காளர்களினால் கடந்த மூன்று தசாப்த காலமாக நாடு பாரிய சுமைகளை எதிர்கொணடது. நாம் மீண்டும் இவ்வாறான ஒரு நிலைக்கு தள்ளப்படக்கூடாது..
அதேபோன்று நல்லிணக்கம், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணி தனிப்பட்டவரின் பொறுப்பு என்ற ரீதியில் சிந்திக்காது நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுவான சிந்தனையுடன், பொறுப்புடன் செயற்படுவதன் தேவையை அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தினார். இளம் சமூத்தினரும் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் வெற்றியை நோக்கி பயணிக்கும்போது சிரமமான விடயங்களை எதிர்கொள்ள வேண்டி ஓற்படும். இதனால் மனோவலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். தற்போதைய சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்தி நாம் நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


