கொரோனா தடுப்பூசியை கொள்வனவுக்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம்!

Friday, May 14th, 2021

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கும் உலக வங்கிக்கும் இடையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி இறுதி வாரத்திலிருந்து கொரோனா தொற்றுத் தடுப்பூசி பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொவிஷீல்ட் தடுப்பூசி சுகாதாரதுறை மற்றும் முப்படையினருக்கு முதற்கட்டமாக வழங்கிய இலங்கை அரசாங்கம், இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கும் அளித்திருக்கின்றது.

எனினும் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி இரண்டாம் கட்டத்தை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்போது ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து பெற்றக்கொள்ளப்பட்ட ஒருதொகை தடுப்பூசிகள் மக்களுக்கு கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தினமும் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மேலும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்காக உலக வங்கியிடம் இலங்கை அரசாங்கம் நிதியுதவி கோரிய நிலையில் சுமார் 80.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த அதற்கான ஒப்பந்தம் நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை கூறுகின்றது. அந்த அறிக்கையின்படி, கொரோனா தொற்றுத் தடுப்பூசி உதவி மறறும் சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துகின்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற இரண்டாவது நிதியுதவியாக இது அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: