குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிஸாருக்குத் தெரியுமாம் – குற்றம் சுமத்துகிறது நல்லூர் பிரதேச சபை!

Wednesday, October 4th, 2017

நல்லுர்ப் பகுதியில் கஞ்சா விற்பவர்களையும், வாளுடன் நடமாடுபவர்களையும் பொலிஸாருக்கு நன்கு தெரியும். அவர்களே அதைக் கட்டுப்படுத்தலாம். அதை விடுத்து 50 குழுக்கள் அமைத்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என  நல்லூர் பிரதேச சபைச் செயலர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சிவில் நிலமை தொடர்பான கூட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவலாக குற்றச் செயல்கள் நடக்கின்றன. நல்லூர் பகுதியிலும் கஞ்சா விற்பனை, மண் கடத்தல், சட்டவிரோத மதுப்பாவனை, வாள்வெட்டு என்பன இடம்பெறுகின்றன. அவற்றைச் செய்பவர்களையும், வாளுடன் நடமாடுபவர்களையும் பொலிஸாருக்கு நன்கு தெரியும். அவர்களே இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

நல்லூர், அரியாலைப் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அங்கு ஓர் பொலிஸ் காவலரண் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலம் கோரப்பட்டது. தற்போது அங்கு ஒரு காவலரண் அமைக்கப்பட்டது. ஆனால் அரியாலைப் பகுதியில் நடக்கும் குற்றச் செயல் தொடர்பில் அங்கு சென்று உடன் தகவல் வழங்கினால் பொலிஸ் நிலையம் சென்று முறையிடுமாறு கூறப்படுகின்றது.

இரவு நேரத்தில் மணல் கடத்தல், சமூக விரோதச் செயல் இடம்பெறும் போது பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினால் அவர்கள் மணல் ஏற்றிய வாகனத்தின் இலக்கம், சாரதியின் பெயர், வீட்டு முகவரி என அனைத்தையும் தகவல் வழங்குபவரிடமே கோருகின்றனர். அவ்வாறிருந்தால் யார் தகவல் தர முன் வருவார்கள்? என்றார்.

Related posts: