கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை இரத்து செய்யப்படும் – அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை !

Friday, March 17th, 2023

2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை இரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமது கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதுவரை 2021 ஆம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் நேற்றுமுதல் 14 நாட்களுக்குள் அதைச் சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணிக்கு மேற்படி சந்திப்பை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் சம்பந்தமாகவே இதன்போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: