குடும்ப ஒட்டுறவு என்பது எங்கள் தமிழ்ச் சமூகத்திற்கே உரிய தனிச் சிறப்பு : மூத்த கவிஞர் சோ. பத்மநாதன்  பெருமிதம்

Tuesday, April 26th, 2016

கீழைத் தேயம் அல்லது இந்திய உபகண்டத்தின் பண்பு அல்லது எங்களுடைய தேசியத்தின் பண்பு பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் தங்களைத் தியாகம் செய்கிறார்கள்.  எங்களுடைய மூத்தவர்கள் தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துப் பேரப் பிள்ளைகளைக் கண்ட பின்னரும் பொதுப்பணிகளில் ஈடுபடுவதற்குத் தயாராகவில்லை. அவர்கள் குடும்பம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிற்கிறார்கள். எனினும், குடும்ப ஒட்டுறவு என்பது எங்கள் தமிழ்ச் சமூகத்திற்கே உரிய தனிச் சிறப்பெனலாம் எனத் தெரிவித்தார் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன்.

கந்தர்மடம் அ .அஜந்தன் எழுதிய  ‘ மனமெனும் கூடு ‘  கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த  சனிக்கிழமை (23-04-2016) யாழ்.கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றக்  கலைத் தூது மண்டபத்தில் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மேல் நாட்டில் பிள்ளையொன்று  18 வயதுக்கு வந்து விட்டாலே அது  தனக்கென ஒரு தனித்துவ பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும். அதற்காகச் சமூக நலனோம்பு   திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசாங்கத்தால் வகுக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைகள் சுதந்திரமாகத் திரிவார்கள். பிள்ளைகளைப் பெற்றோர் கண்டிக்க முடியாது. ஆனால், எங்களுடைய பண்பாடுகள் , எங்களுடைய நடைமுறைகள் வேறு .

எமது மண்ணிலே அல்லும் பகலும் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காகப்   பாடுபட்டுழைத்து ஆளாக்கிய பல  பெற்றோர்கள்  தங்கள் முதுமைக் காலத்தை முதியோரில்லங்களில் வேதனையுடன் கழிக்கின்றனர். முதியோரில்லங்கள்  எங்கள் சமூகத்தைப் பீடித்த பிணி என்றே கூற முடியும். எங்களுடைய சைவ சமூகம் வகை தொகையின்றி ஆலயங்களை நிர்மாணிப்பதில் முன்னிற்கிறது. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயங்களைப் பராமரித்தாலே போதுமானது. புதிதாக ஆலயங்கள் தேவையில்லை. நாங்கள் எமது சமூகத்தில் அல்லல்படுகின்ற மக்களுக்கு உதவிகள் செய்யாமல் வீணாகத்  திருவிழாக்களின்  கேளிக்கை நிகழ்வுகளுக்கு அதிகளவு பணத்தைச் செலவிடுகின்றோம். இந்த நிலை மாற வேண்டும் .

உளவியல் துணைப் பணி என்பது மிகவும் பணி . வெளிநாட்டு உளவளத் துணையாளர்கள் இங்கு வந்து பணி செய்கின்ற போது அவர்களுடைய அமர்வுகளுக்கு நான் மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டேன் . ஆனால், என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் மொழி பெயர்ப்புச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், முழு நேரமும் உளவளத் துணை வழங்குபவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும். உளவளத் துணையை ஒருவர் நீண்டகாலம் செய்யக் கூடாது என நிபுணர்களே சொல்லியிருக்கிறார்கள். முழுநேரமும்  உளவளத் துணைப் பணியில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் இந்தப் பணியில் ஈடுபடக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கந்தர்மடம் அ .அஜந்தன் பல வருடங்களாக உளவளப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தான் சிறுவர்களை உளவள ஆற்றுப்படுத்தலில்  ஈடுபட்ட போது பெற்ற அனுபவங்களைத்  தன் கவிதைகளில் உட்புகுத்தியுள்ளார்.

அஜந்தன் கவிதை எனும் கலை வடிவம் ஊடாக ஈழத் தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநியாயங்களையும் , போர் தந்த ஆறாத காயங்களையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். அவர்  சமூகத்தில் நடக்கும் அனைத்துக் கொடுமைகள், வன்முறைகளுக்கும் எதிராகக்  குரல் கொடுப்பதற்காக  தனது எழுத்துக்களை ஒரு ஆயுதமாகத் தொடர்ந்தும் முழுவீச்சுடன்  பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்..

Related posts: