கிரிக்கெட் ஒப்பந்தம் சூதாட்டத்தை போன்றது!
Tuesday, October 25th, 2016
கிரிக்கெட் ஒப்பந்தங்களை தயாரிக்கும் பொழுது வீரர்களை பாதுகாக்க கூடிய வகையிலேயே ஒப்பந்தங்களை தயாரிக்க வேண்டும். வீரரொருவர் தன்னுடைய நாட்டினை பிரதிநிதித்து வப்படுத்தி டெஸ்ட் போட்டியில் வெற்றிகண்டால் அவருக்கு அதிகளவு பணம் வழங்கப்படுமென கூறுவது தவறான செயலாகும் என முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
இச்செயலை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது . இவ்வாறான சந்தர்பங்களில் வீரரொருவர் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதை காட்டிலும் போட்டிகளில் வெற்றியீட்டி அதிகளவிலான பணத்தை சம்பாதிக்கவே முனைவார்கள்.
இவ்விடயம் தொடர்பாக விசேட அவதானத்தைச் செலுத்த வேண்டும். போட்டியொன்றினை வெற்றிகொண்ட பின்னர் அதிகளவு பணம் ஈட்டிக்கொள்ளலாம் எனும் எண்ணம் பாடசாலை மாணவர்களிடையேயும் தோன்றலாம். இவ்வாறானதொரு நிலை ஏற்படுமாயின் நாட்டிற்காக விளையாடுகின்ற வீரர்களை எம்மால் அடையாளங் காண்பது கடினமாகும். இப்போட்டிகள் விளையாட்டல்ல சூதாட்டமே… என முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
புதிய கிரிக்கெட் ஒப்பந்தம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டார். இணைய மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த வேளையிலேயே இவ்வினா எழுப்பப்பட்டது.
இணையம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைப்பெற்றது. இச்சந்திப்பில் மேலும் கருத்துரைத்த முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவர் அர்ஜூன ரணதுங்க புதிய கிரிக்கெட் ஒப்பந்தத்தினால் விளையாட்டின் நலன் பேணப்படாதென தெரிவித்தார். இவ்வொப்பந்தமானது விளையாட்டின் நலனையன்றி வியாபார கிரிக்கெட் சபையின் தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
நாம் விளையாட்டில் ஈடுப்படும் பொழுது ஒரு போதும் பணத்தை முன்னிலைப்படுத்தவில்லை. ஆனால் இன்றைய கிரிக்கெட் நிர்வாகச் சபையானது பணத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. அதாவது பணத்தை ஈட்டிக்கொள்ளும் பொருட்டே நாட்டிற்காக விளையாடுகின்றார்கள். அதிகளவு பணத்தை ஈட்டிக்கொள்ளும் பொருட்டே நாட்டை வெற்றிப்பெறச் செய்கின்றார்கள்.
இவ்வாறனதொரு முறையினையே தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளார்கள். வியாபாரிகள் கிரிக்கெட் நிர்வாகச் சபையில் அங்கம்வகிக்கும் பொழுது பணத்திற்கே முன்னுரிமை வழங்குவார்கள். விளையாட்டிற்கல்ல. இந்நிலை இன்னும் சில காலத்திற்கு தொடருமேயானால் எங்களுடைய கிரிக்கெட் விளையாட்டு முழுமையான அழிவடைந்துச் செல்லும்.
அதுமாத்திரமன்றி விளையாட்டு வீரர்கள் தொடர்பாக கருத்துரைப்பதை பார்த்தோமேயானால் கடந்த காலத்தில் ஒரு ஓட்டத்திற்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டதென தெரிவிக்கப்பட்டது. இவ்வீரர்கள் விளையாட்டின் பொருட்டு தங்களுடைய வாழ்க்கையினை அர்பணித்துள்ளார்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். பாடசாலை காலம் முதல் தங்கள் வாழ்வினை அர்பணித்துள்ளார்கள்.
விளையாட்டு வீரர்கள் எவ்வளவு அர்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் என்பதனை நான் நன்றாகவே அறிவேன். காலையில் பயிற்சிகளிற்கு வந்தவுடன் இரவே வீடு திரும்புகின்றார்கள். இவ்வாறான வீரர்களிடன் ஒரு ஓட்டத்திற்கு எவ்வளவு பணம் ஒரு விக்கெட்டிற்கு எவ்வளவு பணம் என கூறுவது அவர்களின் தரத்தினை குறைப்பதாகும். இச்செயற்பாடுகளை எண்ணி நான் கலக்கமடைகின்றேன். என்னால் ஒன்றும் செய்யவியலாது. நல்லாட்சியிலும் தேவையற்ற நபர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.வீரர்கள் போட்டிகளை வெற்றி கண்டவுடன் அதிகளவு பணம் வழங்கினால் தவறில்லை. அதனை ஒப்பந்தத்தில் உள்ளடக்கவியலாது.

Related posts:
|
|
|


