காணிகளிலுள்ள பற்றைகளை உடன் துப்புரவு செய்ய அறிவுறுத்து!

Wednesday, October 25th, 2017

பற்றைகளாக காணப்படும் இடங்களில் நீர் தங்கி நிற்கக்கூடிய பாத்திரங்களை இனந் தெரியாதவர்கள் வீசிச் செல்கின்றனர். அவற்றால் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக் கூடிய ஏது நிலை உருவாகின்றது. அவற்றைத் துப்புரவு செய்து டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்ததாவது:

கடந்த மாதம் டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆகக் காணப்பட்டது. இந்த மாதம் 18 ஆம் திகதிவரையில் டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. அது தொடர்பாக ஆய்வு செய்த போது தொற்றுக்குள்ளானவர்கள் உள்ள பகுதியில் காணப்படும் பற்றைக் காடுகளில் நுளம்பு அதிகம் உற்பத்தியாவது கண்டறியப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் காணப்படும் பற்றைக் காடுகளை மக்கள் உடனடியாகத் துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் காணி உரிமையாளர் அல்லது அதைப் பராமரிப்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related posts: