பலத்த பாதுகாப்புடன் கூடியது நாடாளுமன்றம் – நாட்டின் நிலைமைகள் குறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள்!

Tuesday, April 5th, 2022

இன்றையதினம் நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக குறித்த பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். .

நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மையை காண்பிக்கும் குழுவுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்காது அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க நடவடிக்கை எடுக்குமாயின் தாம் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை அங்கத்துவப்படுத்தும் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல்லன்சா தெரிவித்திருந்த பின்னணியில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியால் அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை பல கட்சிகள் புறக்கணித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதுவரையில் கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: