கல்வியமைச்சை முடக்குவோம் -தொண்டர் ஆசிரியர்கள்!

Tuesday, October 10th, 2017

நவம்பர் மாதத்துக்கு முன்னர் தமக்கான நியமனங்கள் வழங்கப்படாவிடின் வடக்கு மாகாணக் கல்வியமைச்சை முடக்கிப் போராடுவோம் என்று வடக்கு தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான சர்ச்சையில் அனுமதி கிடைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்காக அனைவரது வாய்ப்பையும் தடுத்து நிறுத்துவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் தொண்டராசிரியரிகள் மேலும் தெரிவித்ததாவது –

2006 ஆம் ஆண்டிலிருந்து முறைப்படியான சகல பதிவுகளுடன் தகவல் திரட்டுப் புத்தகம் பெறுபேற்றுத் தகுதியுடன் சம்பளமின்றிப் பணியாற்றினோம். 2013 ஆம் ஆண்டின் நேர்முகத்தேர்விலும் தோற்றியிருந்தோம். ஆனால் நியமனம் வழங்கப்படாமையால் ஏமாற்றப்பட்டோம். தற்போது 642 பேருக்கு நியமனம் கிடைக்கும் என எதிர்வு கூறப்பட்ட நிலையில் 182 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் தொண்டர் ஆசிரியர்கள் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டுள்ளனர்.

எனவே இதற்கெதிராகப் போராடி ஏனையவர்களுக்கும் அனுமதியைப் பெற முயற்சிக்க வேண்டும். மாறாக அனுமதி கிடைத்த தொண்டர்களின் நியமனத்துக்கு காலம் கடத்தக்கூடாது. எந்தவொரு கொடுப்பனவுமின்றி 12 ஆண்டுகள் பணியாற்றி எமது இளமைக் காலத்தையே தொலைத்து நிற்கின்றோம். எனவே நவம்பர் மாதத்துக்கு முன்னர் எமக்கான நியமனங்கள் வழங்கப்படாவிடின் நாம் வடக்கு மாகாணக்கல்வி அமைச்சை முடக்கிப் போராடுவதைத் தவிர மாற்றுவழிகள் தெரியவில்லை – என்றனர்.

Related posts: