கல்லுண்டாயில் குப்பைகொட்ட மாநகர சபைக்கு நீதிமன்று நிபந்தனைகள் விதித்தது!

Sunday, January 14th, 2018

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குப்பை மேட்டில் எதிர்காலத்தில் தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டுவது தொடர்பாக யாழ். மாநகர சபைக்கு மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய கட்டளைகளை பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாண மாநகரசபை, வலி.தெற்கு, வலி.தென் மேற்கு பிரதேச சபைகளை எதிரிகளாக குறிப்பிட்டு பொதுமக்களால் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கானது தொடர்ச்;சியாக இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கானது மல்லாகம் நீதிமன்றில் கட்டளையொன்றை வழங்குவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் இக் கட்டளைகளை பிறப்பித்திருந்தார்.

இதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் குப்பைமேட்டை சுற்றி வேலி அமைக்;க வேண்டும் எனவும், இக் குப்பை மேட்டில் மலக்கழிவானது கொட்டுவதற்குத் தடை விதித்தும், குப்பை கழிவுகளை எரிப்பதற்குத் தடை விதித்தும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு கொட்டப்படும் பிளாஸ்ரிக் கழிவானது உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் எனவும், கழிவு நீரானது உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் எனவும் அக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த குப்பை மேட்டில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொது மக்களதும், சுற்றுச் சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப் பிரதேச மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய மக்கள் போராட்டங்களை மேற்கொண்டிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாகவே இவ் வழக்கும் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: